Tuesday, 17 November 2015

நான் பாரதிக்கு முன் பிறந்திருந்தால், எனக்குப் பின் பாரதி என்ற ஒருவர் வந்திருக்கவே மாட்டார்'' இலக்கிய செயற்பாட்டாளர் றியாஸ் குரானா ( நேர்காணல் - பிரகாசக்கவி -) 16.11.2015



பிரகாசக்கவி -

கவிஞன் இல்லாத உலகம் எப்படி இருக்கும் ?

ரியாஸ் குரானா -

முதியவர்கள் மட்டும் வசிக்கும் ஒரு கூடாரம்போல் இருக்கும். அல்லது நோயாளிகள் மட்டுமே நிறைந்த ஒரு வைத்தியசாலை போல இருக்கும். இப்படிச் சொல்வேனென்று எதிர்பார்த்திருக்கலாம். நான் அப்படிச் சொல்லப்போவதில்லை. கவிஞனில்லாத உலகம் சொர்க்கம். கவிதையில்லாத உலகம் நரகம்.

பிரகாசக்கவி -

பொன்னாடைகளுக்கு வாயிருந்தால் ?

ரியாஸ் குரானா -

துா... எனக் காறித்துப்பும். பன்னாடைகள் மாத்திரமே பொன்னாடைகளை கொண்டாடுவர்.

பிரகாசக்கவி -

ஒரு கவிதை எதை செய்யவேண்டும் அல்லது எதை
செய்யக் கூடாது ?

ரியாஸ் குரானா -

கவிதை எதையும் செய்யக் கூடாது. எதையும் செய்யச் சொல்லவும் கூடாது. சும்மா இருக்க வேண்டும். சும்மா இருப்பதே கடினமானது. எனக்கு பிடித்ததும் கூட. கவிதை வேலைக்காரர் அல்ல. அதுபோல இதைச் செய் என கட்டளையிடும் எஜமானரும் அல்ல.

பிரகாசக்கவி -

விருதுகள் ஒரு பிரதியை எடை போடுவதற்கான நல்ல
தராசா ?

ரியாஸ் குரானா -

விருதுகள் பிரதியை என்ன ”பிரிதியை”க் கூட எடைபோட உதவாது. மாட்டுக்கு மூக்கணம் குத்துவைப்போலதான் விருதும். அது கௌரவமா? இல்லை விலங்கா? வாங்குபவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். எனக்கு விருது கிடைப்பதாக இருந்தால் நான் அதனுடன் எவ்வளவு பணம் தருகிறார்கள் என்று மட்டுமே பார்ப்பேன்.

பிரகாசக்கவி -

பாரதிக்கு முன் நீங்கள் பிறந்திருந்தால் பெண் விடுதலை பற்றிய உங்கள் பிரதியை எப்படி எழுதியிருப்பீர்கள் ?

ரியாஸ் குரானா -

பெண் விடுதலை பற்றி நான் எழுதியிருக்க மாட்டேன். அதுவும் பெண்களுக்காக ஒரு ஆண் கவிதை எழுதுவதைப் போன்றதுதான். எனவே, பெண்களை அவர்களுக்காக எழுதும்படி சொல்லியிருப்பேன். நான் பாரதிக்கு முன் பிறந்திருந்தால், எனக்குப் பின் பாரதி என்ற ஒருவர் வந்திருக்கவே மாட்டார்.

பிரகாசக்கவி -

A.R ரஹ்மானின் இசையில் ஒரு திரைப்படத்தில் 5 பாடல்களும்
எழுதும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால் ?

ரியாஸ் குரானா -

உண்மையில் இந்தக் கேள்வி ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விதான். றியாஸ் குரானாவின் கவிதைகளுக்கு இசையமைக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால்? இப்படிக் கேட்க வேண்டும். என்றாலும் பரவாயில்லை பதில் சொல்கிறேன். நவீன கவிதையை இசைக்குள் கொண்டுவர இன்றுவரை எந்த இசையமைப்பாளராலும் முடியவில்லை. வெறுமனே சந்தக் கவிதைகளுக்குத்தான் அவர்கள் இசையமைத்துக்கொண்டிருக்கிறார்கள். பாடல் எழுதுவது எனக்கு அவ்வளவு சந்தோசமான விசயமல்ல. கவிதைதான் எனது தேர்வு. பாடல் வருமானத்திற்கானது. நவீன கவிஞர்கள் பலர் பாடல் எழுதியிருந்தாலும், திரையில் தொழில்முறைப் பாடலாசிரியராக இருப்பவர்களைவிட சிறப்பாக எழுத முடியவில்லை. பாடல் எழுதுபவர்களை பாடலாசிரியர் என்பதைவிட ”புலவர்கள்” என்பதே சரியானது. புலவர் என்றால் இன்று வெட்கமான ஒன்றாக பார்க்கிறார்கள்.

பிரகாசக்கவி -

கவிதையின் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு ஒரு பெயர் வையுங்கள் என்று உங்களிடம் கேட்டால் ?

ரியாஸ் குரானா -

மரக்கறி-இப்படி வைக்கலாம். பிடுங்கும்போது புதுசா இருக்கும். நாள்பட்டபல் பழுதடைந்துவிடும். ஆனால், எனக்கு புளியாணம் கடுமையாக பிடிக்கும். அதனால், மொழிப் புளியாணம் என்று வைக்கவே அதிகம் விரும்புவேன். அப்பதான் சு்டவைத்து சுடவைத்து குடிக்கலாம்.

கவிதையின் பரிணாம வளர்ச்சிக்கு பெயர்வைக்கத் தேவையில்லை. உண்மையில் கவிதையை புரிந்துகொள்ள முயற்சித்தாலே போதும். புரிந்து கொள்ளுதல் என்பது கவிதை பற்றி வாசித்தலில் நிகழுவதுதான். ”கவிதைக்கான மாற்று” என்று சுமார் 7 வருடங்களுக்கு முன் எழுதியிருக்கிறேன். அதுவே நல்ல பெயர் என்றுதான் நினைக்கிறேன்.

பிரகாசக்கவி -

கவிஞன் நல்லவனா கெட்டவனா ?

ரியாஸ் குரானா -

கவிஞன் என்று சொல்லுவதில் எனக்கு உண்மையில் உடன்பாடு இல்லை. அது ஆணை மட்டுமே சுட்டுகிறது. அதை முடிந்தளவு மறப்போம். இப்படி தமிழில் எத்தனையோ சொற்களுக்கு பெண்பாற் சொற்கள் இல்லை. கவிஞர்களும் மனிதர்கள்தான். ஆகவே, நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஏதோ குறைபாடு இருக்கிறது என்றுதான் நான் சொல்வேன்.

பிரகாசக்கவி -

உங்களை ஒரு அறையில் அடைத்து வைத்து கவிதைகளை மட்டும் மூவேளை உணவாக உங்களுக்கு
பரிமாறினால் உங்கள் எதிர்வினை எப்படி இருக்கும் ?

ரியாஸ் குரானா -

ஒரு வேளை உணவாக கவிதை கிடைத்தாலும் வாந்தி வந்துவிடும். வயிற்றைக் குமட்டும். கவிதை வெத்திலபாக்குப் போன்றது, மெல்ல வேண்டும் பின் துப்பிவிட வேண்டும். ஆனால், நாக்கும் உதடும் சிவக்க வேண்டும். லேசா கிறுகிறுப்பும் வேண்டும். அவ்வளவோடு நிறுத்திவிடத்தான் விருப்பம். தண்ணி அடிக்கும்போது பக்கத்தில் பைற்றாக பாவிக்க மட்டுமெ கவிதை உதவும். மூவேளை உணவா.. மாடுகூட சம்மதிக்குமா என்று தெரியவில்லை.

பிரகாசக்கவி -

கவிதைப் பட்டறைகள் அல்லது பயிற்சி வகுப்புக்கள் மூலம் ஒரு கவிஞன் உருவாக்கப்பட்டால் அவனில் இருந்து வெளிவரும்
பிரதிகள் எந்திர மனிதனைப் போன்று இருக்கும் என்று நான்
சொன்னால் அதனை ஏற்றுக்கொள்வீர்களா ?

ரியாஸ் குரானா -

கேட்டுக்கொள்வேன். ஏற்றுக்கொள்ளமாட்டேன். இப்படிச் சொல்லும் உரிமையை நான் மறுப்பதில்லை. ஆனால், அதை ஏற்கத்தான் வேண்டுமென்றுமில்லை. அதற்கு என்னிடம் நிறைய காரணங்கள் உண்டு. கவிஞன் வானத்திலிருந்து விழுவதில்லை. அதுபோல கவிதையும் யாரோ ஒரு சிலருக்கு வானத்திலிருந்து பிரத்தியேகமாக “வஹி” மூலம் வந்து கிடைப்பதுமில்லை. உருவாகுவதுதான் கவிஞன். உதிப்பது அல்ல. மனிதனின் ஏதோ ஒரு பருவத்தில்தான் கவிதையை அவன் எழுதுகிறான். பிறந்தவுடன் கவிதையை யாரும் எழுதுவதில்லை.

ஆனால், இதுவரை கவிஞன் என்றால் ஏதோ ஒரு விசித்திரமான பிராணிபோல, மற்ற மனிதர்களில் இருந்து ஏதோ சிறப்பு மிக்க ஒருவர்போல நம்பவைக்கபட்டு வந்திருக்கிறது. அனைத்து மனிதர்களும் கவிதையை ஏதோ ஒரு வகையில் உணரும் மனதைக்கொண்டிருப்பவர்கள்தான். கவிதையை ரசிப்பதற்குக்கூட அந்த மனம் வேண்டும். ஆகவே, அவர்களிடம் கவிதையை உணருகின்ற, ரசிக்கின்ற மனம் இருக்கிறது. ஆனால், அவைகளை மொழியில் பதிவு செய்ய முடியாமல் இருக்கிறது. இவ்வளவுதான் வித்தியாசம். ஆகவே, மொழியில் எப்படிப் பதிவு செய்வது என்பதற்கான வழிமுறைகளை தடங்காட்டுவதே பயிற்சி பட்டறை என்பதாகும்.

இங்கு இன்று எழுதுகிறவர்கள் அனைவரும், இதற்கு முன் மொழிவெளியில் கவிதை என சொல்லப்பட்டவைளை படித்து அதன்பின்தான் கவிதைகளை எழுதுகிறார்கள். கவிதை என்று சொல்லப்படுகின்ற எதையும் படிக்காது - நான் கவிதை எழுதுகிறேன் என்று யாரும் சொல்ல முடியாது. ஆக, அவர்கள் மறுத்தாலும் படிக்கப் படிக்க ஏற்படும் பழக்கம்தான் அது. அந்தப் பழக்கத்தை அழகாக பயிற்ச்சி என நான் சொல்கிறேன். அவ்வளவுதான்.

மொழி என்பதே மனிதனின் தயாரிப்புத்தான். ஆகவே, தயாரிக்கப்பட்ட ஒன்றைவைத்துக்கொண்டு அதில் ஏதோ உதிப்பதாகச் சொல்வது நகைச் சுவையானது. மொழியில்தான் சிந்திக்கிறோம். என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். சரி, கவிதைப் பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பிருந்தால், இவை குறித்து இன்னும் விரிவாகப் பேசலாம். கவிதை உருவாக்கத்தில் எவ்வளவு பயிற்சியும், மொழியைக் கையாள்வதில் எவ்வளவு ஆற்றலும் இருக்கிறதோ அந்தளவு கவிதை பிக்சனாக (புனைவாக) மாறும்.

இன்னும் ஒரு விசயம் மனதில் எந்த விசயமும் ஒரு ஒழுங்கில் சிந்திக்கப்பட்டு வருவதில்லை. அது குளம்பித்தான் தோன்றும். அவைகளை மொழியில் ஒழுங்குபடுத்தும் போதுதான் கவிதையாக மாறும். தோன்றுகிறது என்று சொல்கிறவர்கள் தோன்றும் அனைத்தையும் அப்படியே மொழியில் எழுதிவைக்கிறார்களா என்ன? ஒரு சிறு திருத்தமும் செய்வதே இல்லையா? உங்களுக்கு தெரியுமா? தியானம் கூட பயிற்சிதான். கவிதை எம்மாத்திரம். சரி...

உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் கவிஞராக ஆவதற்குரிய அனைத்து தகுதிகளுடனுமே பிறந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் உணரும் , சிந்திக்கும் விசயங்களை மொழியில் பதிவுசெய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவைகளைப் பதிவு செய்வதற்காக தடங்காட்டுவது அவசியமானது. அதையே செய்யப்போகிறோம்.

என்னால்தான் கவிதை எழுதமுடியும் மற்றவர்களால் முடியாது என பெருமையடிக்கும் கவிஞர்களுக்கு இது சற்று சிக்கலானதாக இருக்கலாம். யாரும் கவிதை எழுதலாம் அது ஒரு சீன வித்தையல்ல. அல்லது அது ஒரு வித்தை. அவ்வளவுதான்.

Saturday, 14 November 2015

உனக்காக எல்லாம் உனக்காக


1.
உன்னிடம்
ஒரு வானமும்
என்னிடம் சில
நட்சத்திரங்களும் இருக்கின்றன
எனக்கு இரவும்
உனக்கு பகலும் பிடிக்குமென்பதால்
நானொரு
சூரியனை வரைகிறேன்
இனி என்வானில்
சந்திரனுக்கு இடமேயில்லை..!

2.
என்னிடமொரு கடலிருந்தால்
அதைச்சுருட்டி
உனக்கொருசட்டை தைத்திடுவேன்
அதனால் மீன்களுக்கு மானம்போனால்
உன் புன்னகையில் புடவை நெய்து
புதுச்சட்டை கொடுத்திடுவேன்..!

- பிரகாசக்கவி -

ஒருகுழல் பிட்டு



அவ்டதங்களை
அள்ளிக்குடித்த வானம்
அப்படியே அழகழகாய்ச் சிவந்தது ...

இறக்கை முளைத்த சிறுமானினங்கள்
மெல்ல மெல்ல
ஆகாயம் முத்தமிடப் பறந்தன...

அதன் உதிர்ந்த புள்ளிகள் ஒவ்வொன்றும்
பனிமழையாய் பொழிந்தது ...

ஜிவ்வென்ற குளிரில்
ஜவ்வாகிப்போன மீன்களுக்கு இப்போது
சுள்ளென்று பெரும்காய்ச்சல் ...

ஆவிபறக்கும் அதன்மேனியை
என் மனைவி
பிட்டுக்குழலில் இருந்து
அழகான தட்டமொன்றில்
அப்படியே
அள்ளிப் பரிமாறுகிறாள்
ஆகா ஆகா
என்ன சுவை என்ன சுவை !!!


- பிரகாசக்கவி -

ஹூர்லீன் தேவதை


சேகுவேராவின் புன்னகையில்
புத்துயிர் கொண்ட
அசாத்திய கனவுகள் போல
எனக்குள்ளும் சாத்தியப்பட்டவள் நீ

நேற்றையபொழுதில் நீ
சுவர்க்கம் பற்றியும்
சுவனத்து தாரகைகளாம்
ஹூர்லீன்கள் பற்றியும்
என்னிடம் சிலாகித்துப்பேசினாய்

அப்போது
அடிக்கடி என் கனவுக்கு
கல்லெறியும் நட்ச்சத்திரங்கள்
என்னிடம் நச்சரித்துப்போவதுபற்றி

எப்போதோ நீ கேட்டஞாபகம்
இப்போது வந்ததால்
சொல்லவா என நான்கேட்க
இப்போது விட்டால்
இனி எப்போது என்று நீ சொன்னதால்
இப்போதே சொல்கிறேன் கேள்

உன் வனப்பில் மதிமயங்கிய
சுவனத்து தாரகைகளுக்கு இப்போதெல்லாம் ஒரே மாரடைப்பாம் !

- பிரகாசக்கவி -

 

Thursday, 12 November 2015

அவளும் ஒரு பெண்



அவளை அவர்கள்
வாழும்போதே வதைத்தார்கள்
வாழ பழகிக்கொண்டாள்
இன்னும்
அவள் இறப்பின் சேதியை
அவளையே வாசிக்க செய்தார்கள்
அப்போது அவள் சிரித்திருக்கவேண்டும்
முல்லாக்கள்
அவள் பேச்சில் கண்டதெல்லாம்
முற்றும்பிழை
அதனால் அவளை தைத்ததெல்லாம்
முற்களாயிற்று
இவளும் ஒரு
இஸ்லாமிய பெண்தான்
ஆனால் இவள் ஒரு நாளும்
புர்காவுக்குள் மட்டும்
பூப்பறிக்க ஆசைப்பட்டவள் அல்ல
அவள்
துப்பட்டாவில்
பூந்தோட்டம் வளர்க்க நினைக்கிறாள்
கூடவே புள்ளிமான்களையும்
வளர்க்கிறாள்
சிந்தனைக்கு சிறகு சமைக்கிறாள்
அவள் தேசத்தில் நுழையும்
வேடுவனின் விஷம்பறிக்க
வீச்சருவாக்களையும் வீசுகிறாள்
பாரதியின் பாசையில்
சொல்வதென்றால்
இவள் ஒரு புதுமைப்பெண்
இவளுக்கும்
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
கூடவே இறையச்சமும் இருக்கிறது
ஆனால்
அவர்கள் அவளை
எப்படி எப்படியோ சொல்வார்கள்
இத்தனைக்கும்
அவர்கள் கூட்டல் கழித்தலில்
இன்னும் இன்னும்
அவளும் அவள்போன்றவளும்
கூட்டிப்பெருக்கி
பொங்கிப்போடும்
எந்திரங்களன்றி வேறில்லை



- பிரகாசக்கவி -

தொட்டில் நிலா



இருள்கவியும் நாளொன்றில்
நாடு ஜாமத்தை
நாய்கள் முத்தமிட்டன
பனிவிழும் இரவில்
வானெங்கும் பால்மழை
சுருண்டுபடுத்தும்
தூக்கம்வராப் பூனைகள்
சொட்டுமந்தப் பாலை
கிணற்றுக்கொட்டில் நின்று நக்கின
காற்றுக்கு கலியாணம் போலும்
கலகலவென வயிறு குலுங்கச்சிரித்து
மரம், செடி, கொடிகளோடு கதைபேச
பூவிழந்து பொட்டிழந்து
மூளியாகிக்கிடக்கும் முந்தாநாள் நிலவுக்கு
ஒரே முனுமுனுப்பு
காரணம்
என்வீட்டில் மலர்ந்திட்ட சேய்நிலவால்
இரவெங்கும் ஒரே மினுமினுப்பு 

- பிரகாசக்கவி -

புலம்பல்


ஒருபுறம்
நகரத்தின் நரகம் கரைந்துருக
உடலெங்கும் கசிகிறது
வியர்வைத்துளிகள்
மறுபுறம்
உயிர்க்கொல்லியை
தசையில் போர்த்தி
தெருக்களெங்கும் தவித்தலையும்
காமப் பேய்கள்
பெரிய கையான்பட்டு
மக்கோசாகிப் போன
சிறு குண்டுகலாட்டம் சிந்திச் சிதறி
அலைமோதும் மானிடகூட்டம்
பக்கத்துத் தெருவை
பத்துத்தெரு சுற்றி
பணம் பிடுங்கும்
ஆட்டோ முதலைகள்
பழங்களோடு பழங்களாக
பழுதுப்பழங்களை கூட்டுச்சேர்த்து
பணம் பார்க்கும் பழக்கடைகள்
ஊனம் காட்டி
உயிர் வளர்க்கும் உதவாக்கரைகள்
வீதிகளை பலாத்காரம் செய்யும்
பெரியதும் சிறியதுமான
எந்திரக் காளான்கள்
இன்னும் இன்னும் இதுபோல் நீளும்
இத்தியாதிகளின் நடுவே
ஒரு மயானத்தின்
மௌன அமைதியை தேடுகிறேன்
அதை உணர்தல்
சந்திரனில் சாத்தியமாம்
புறக்கோட்டையில்
அதை மருந்துக்கேனும் நுகர்தல்
மலையில் மாடேற்றும் கணக்காம்



- பிரகாசக்கவி -

அரசாங்கம்



பக்கத்துவீட்டு பெத்தாவின்
மா வாளிக்குள் கரைந்திருந்ததை
இன்று சுடவேண்டுமென்பதற்காக
நேற்றே புளிக்கவைத்தாயிற்று ...
நாளை
பக்ரீரியாக்களும்
பங்கசுகளும் சேர்ந்து
நன்றாக அது நொதிக்க.
பாலப்பம்
முட்டையப்பமென்று
வித விதமாய் சுடுபட்டதும்.
கருகிய அப்பத்துக்கும்
கைதவறிய அப்பத்துக்கும் ஆசைப்பட்ட
அண்டங்காக்காய்கள்
கூட்டம் கூட்டமாய்
அந்தரத்தில் அடிபடும்.
மீண்டும்
மா, புளிக்கும்
மாற்றீடாய்
பேரப்பிள்ளை தோசை சுடும்
ஆனால்
மாவெல்லாம் ஒன்றேதான் ...!

- பிரகாசக்கவி -

கருவின் கருச்சுமப்பவன்


ஆக்காட்டியின் அசரீரியாய்
எனக்குள் உன் அவஸ்தை
நீ கருச்சுமப்பவள்
நான் உனைச்சுமப்பவன்

வாந்தியெடுத்து வலித்துப்போன
உன் குடலுக்கும் குரல்வளைக்கும்
எதைத்தடவி நான் வலி தீர்க்க,

அடிவயிற்றில் ஆர்ப்பரிக்கும் நம்
பொன்குஞ்சின் கதகதப்பில்
உன்னையே நீ மறக்கின்றாய்
அழுகின்றாய், சிரிக்கின்றாய்
கதைக்கின்றாய், நடக்கின்றாய்
இன்னும்
என்னன்னமோ செய்கின்றாய்

ஆனால் நான்

உன்னையே
நிதம் நினைக்க
என்னையே மறக்கின்றேன்
உன்னிலே தினம் உருக
என் மென்மையை கரைக்கின்றேன் ...

- பிரகாசக்கவி -

உவமை


எனக்குள் இரண்டு
உவமைகள் தோன்றுகின்றன
ஒன்று
முற்றும் உதிர்ந்து
காய்ந்துபோன ஒருமரம்
மற்றொன்று
காகம் கொத்தித்தின்று
கோதாகிப்போன பப்பாளிப்பழம்
இவை இரண்டையும் ஒன்றோடு
உவமிக்க வேண்டுமாகயிருந்தால்
எலும்புக்கூடு ஒன்றே
அதற்கு நன்கு பொருந்தும்
இங்கே
நீங்கள் என்னிடம்
அதற்கு எதிர்கருத்து கேட்டால்
நிச்சயம் பதிலாய் நான்
என்னைச்சொல்லி
எனக்குள் ஒருதுளி உயிர்தந்த
வல்லோனுக்கு நன்றி என்பேன்

- பிரகாசக்கவி -

கொள்ளைமருந்து கொஞ்சம்விருந்து


படைத்தவன் சித்தப்படி
நெல்மணிகளுக்குள் கிடக்கிறது ஜீவிதம்
கைப்பிடி,
சுண்டு,
கொத்து,
மரைக்கால் என்று நீளும் அதன்
அளவை
நிறுவைகளுக்குள் புதைந்த
வாழ்தகவின்
நீள, அகல, உயரங்களை
சூத்திரங்கள் தொலைந்த எண்கணிதத்தில்
சாஸ்த்திரங்களை
வெல்லத்துடித்தல் போல
நிகழ்தகவின் நியதிகளை

மருந்துகளாலும்
மாத்திரைகளாலும்
விஞ்சத்துடிக்கிறது ஆன்மா ...

- பிரகாசக்கவி -

Tuesday, 21 July 2015

கொலைபற்றிய கொடுந்துயர்



கொம்புநீட்டிய கோச்சுவண்டி
திசைமாறி
குடைசாய்ந்து என்
நடுவீட்டில் நாட்டியமாடியதால்
கொலைசெய்தல் பற்றியபயம்
சிறிதுமின்றி
இன்றுதான் நிகழ்ந்தது அந்தக்கொலை
கொலைக்குப் பின்னரான அமைதியை
என் மனைவி
ஒரு மயானத்தோடு
ஒப்பீடு செய்துவிட்டுப் போனபின்தான்
அந்த மரணபயம்
கொலைக்காரன் என்னையும் தொற்றிக்கொண்டது
பாவம்
அதுவும் ஒரு உயிர்தானே ...

- பிரகாசக்கவி -

பழுத்த இரவு


குளிர்ந்த சூரியனை
தின்றுவிட்டு
சிறுகுப்பி விசத்தை
கொப்பளிக்கிறேன்
சயனைட் பூசிய நிலவொன்று
பழுத்து
பாலில் விழுந்ததும்
அதை
சடுதியாய் கவ்விச்செல்ல
கடுவனொன்றும் அங்கே
வெள்ளைத்தாளில் உலாவுது !

-பிரகாசக்கவி-

அன்பு மகளுக்கு




எப்படி வாப்பா ?
மகள்தான் பிறப்பாலென்று
உங்களுக்கு
தெரியுமென்று கேட்கிறாயா மகளே ...
அண்ணலாரின்
அருமை மகள்
பாத்திமா போல
ஒரு மகள் வேண்டுமென்னும்
பேராசைதான் மகளே ...
பாத்திமாவாய் இல்லாது
அவர் மக்கள்
ஹசன், ஹுசைன் போல்
நான் ஆனால்
என்ன செய்வீங்க
வாப்பா என்று
நினைக்கிறிங்களா மகளே ...
ஆணென்றாலும் பெண்ணென்றாலும்
அல்லாஹ் தார
அருட்கொடைய
அல் ஹம்துலில்லாஹ்
என்று சொல்லி
ஆனந்தமா ஏற்றிடுவேன்
அன்பு மகளே ...
நாலு நாளா
நம்மூரு ஆசுபத்திரியில
அட்மிட்டாகியிருந்த உங்க உம்மாவ
நேற்று பகல்தான் மகளே
டிக்கட் வெட்டி
வீட்ட கூட்டிவந்தன்
நீங்க
வளர தொடங்கின நாள்முதலா
அவ வயித்துல
அன்னந்தண்ணி இறங்குதில்ல
ஆசைப்பட்டத
கடிச்சி தின்னா
அடுத்த நிமிஷம்
வாந்தி வாந்தியா வந்திடுது
நாற்பத்து நாலுகிலோ
இருந்த உங்க உம்மா
இப்ப
எட்டுக்கிலோ குறஞ்சிட்டா
சத்தான சாப்பாடு
சாப்பிட்டாத்தான்
அன்புமகள் உங்களுக்கு
ஆரோக்கியாமாம் எண்டு
டாக்ட்டர் மாமா சொன்னதால
இப்பல்லாம்
கொஞ்சம் கொஞ்சமா சாப்பாட்ட
கஷ்டப்பட்டு
இஸ்டப்பட்டு சாப்பிடுறா
நீங்க
வயிற்றுள இருந்து
துடிக்கக்குள்ள
உம்மாவ
உதைக்கவேணா மகள்
பாவம் உம்மா
அவ வலி தங்கமாட்டா தங்கம்
டாக்ட்டர் மாமா
சொல்லி இருக்காரு
நீங்க
பத்தாம்மாசம் பிறந்துடுவிங்கலாம்
இன்ஷா அல்லாஹ்
அதுவரைக்கும்
நானும் உம்மாவும்
நீங்க நல்லபடியா
பிறக்கணும் எண்டுசொல்லி
பிரார்த்திக்கிரம் செல்லக்குட்டி
கடைசியா
மகள்
நீங்க பிறந்ததும்
முதல் முத்தம்
யாருக்கு மகள் கொடுப்பிங்க
யாரு ?
உம்மாக்கா மகள் கொடுப்பிங்க
சமத்து பிள்ள மகள் நீங்க
எங்க
வாப்பாக்கெண்டு
சொல்லிடுவிங்களோ எண்டு
வாப்பா
ஒரு நிமிஷம்
பயந்துபோயிட்டன் செல்லமகள்

- பிரகாசக்கவி -

சிசு


ஒரிதயத்துள்
இன்னொரிதயத்தை
தைத்திருக்கின்றேன் ...
அது
கால்மடக்கி
கைமடக்கி
கண்ணுறங்கும்
பின்
வாய்திறந்து
விழிமலர்ந்து
பாவிசைக்கும்
நாளறிந்து
என்
வாய்பிளக்கும் !

- பிரகாசக்கவி -

மசக்கை



அவன் தந்த விதையொன்று
அவள் பொற்குடத்தில் முளையாகி
பொன்குஞ்சென வளர்கையில் ...
அங்கே
ஆம்பலின் சோலையில்
அரும்பிய அத்தியின்
மலர்வாய்தனில் அறுசுவையும்
மசக்கையாய் மீள்கையில்
ஆ வென்ற படிக்கமொன்று
தா வென்று கிடக்கிறதே ..!

- பிரகாசக்கவி -

கற்பனை




இரவையும் பகலையும்
வெண் மையாக்கி
கொக்கு ஒன்றின் இறக்கைகளில்
வலதும் இடதும் தடவி விடுகிறேன்
அது
இவ்விரண்டையும் தூக்கி
நிலவுக்கும் உலகுக்குமாய்
பறப்பதற்குள்
வானம் உதிர்ந்து விடுகிறது ...

- பிரகாசக்கவி -

Sunday, 12 April 2015

அவா


பட்டப்பகலில் என்னை நிக்கவைத்து
சுட்ட சூரியனை
இனி நான்
நட்டநடு இரவில் தட்டியெழுப்பி
கேள்வி கேட்ப்பேன் !
துணைக்கு
என் மகள் வருவாள் ...

- பிரகாசக்கவி -

கருத்தரிப்பு


துளியொன்றை என்னவள்
இப்போது சுமக்கலானால் ...
அது நதியாகி
என் மார்மீதும் தோல்மீதும்
நாளை தவழும் ...
அதை
மான் என்றும் தேன் என்றும்
என்னவள் கொஞ்சுவாள் ...
பின்
உயிரென்றும்
ஈரக்கொழுந்தென்றும்
நான் அதைக்கொஞ்சி
என்னவளை விஞ்சுவேன் ...

- பிரகாசக்கவி -

காதலர் தினம்


தலைமுறைகளை தின்னுமுனக்கு
தரித்திரமென்று பெயர் வை ...
வரையறைகளையும்மீறும் கழிவறையுனக்கு
காதலர்தினமென்றொரு மடை வை ...!



- பிரகாசக்கவி -

ஊடல்


சொண்டுடைந்த
மரங்கொத்தியொன்றின் அவஸ்தையாய்
ஒரு முறிவுச்சத்தம்
மூன்றாம் உலகப் போரானது !
ஆதலால்
ஒருசோடி இதயத்தின் ஒப்பாரியோ
ஊமையாய் கரையுது ...
பின்,
அண்டத்தையே சுருட்டி
அடுப்புக்குள் வைத்திடும் மௌனம்
ஆறறிவை பிழியிது ......

- பிரகாசக்கவி -

ஒழுப்பம் பாசமும் ஒருகொத்து நேசமும்


தொடுவானமாய்
தொங்குது வானம்
கண்ணயர்ந்து தூங்குது கடல்
மீசைமுறுக்கிய மேகங்களை பிடித்து
மொட்டையடித்து
சவரம் செய்கிறது காற்று
இதற்கிடையில்தான் நடக்கிறது
நமதான இனிப்பு
சில கச்சான் சுருல்களோடு
உனதான பிஞ்சு விரல்கள்
அங்குமிங்கும் தவழ்ந்து,
ஓடிவந்து என்
விழிகளை முத்தமிட்டு கடக்க
ஒரு வண்ணத்தும்பியாய் நீ பறந்தாய் ...
என் ஒழுப்பம் அன்பில்
கலந்து இருந்தது
உன் ஒரு கொத்து நேசம் !!!



- பிரகாசக்கவி -

தன்னம்பிக்கை

எனக்கு
சிறு குருவியின்
அல்லது
அரும்பறவையின் சிறகுகளை
கடன் வேண்டித்தாருங்கள்
விடிவதற்குள்
ஒரு நதியையும்
உயிர் பிரிவதற்குள்
பெருங்கடலையும் கடந்தாக வேண்டும் ...
நேற்று
கனவில் நான் கொத்தித்தின்ற
எவரட்ஸ்பழத்தின் ருசி
என் எச்சிலில் குறைந்து போவதற்குள் !



- பிரகாசக்கவி -

புனைவு


துண்டுநிலவை
துப்பியிருந்தது வானம் !
மண்சட்டியில்சுண்டவச்ச
நேத்தைய
நெத்தலிமீன் பாலானம்போலது
தண்ணிக்குரச்சிக்குள்ள தகதகக்க
அடுப்பங்கரை பூனையொன்று
அதை நக்கிப்பாக்குது
அதில் துள்ளியெழும்
மீன்குஞ்சின் கவனமோ
கடலைத் தேடுது !!!

- பிரகாசக்கவி -

உயிர் நிலா


அழவும்
ஆசுவாசமின்றி
உலாவமட்டுமே முடியுமான நாளொன்றில்
மூர்ச்சையாகி கிடந்த என்னை
சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தவள் நீ !

காய்ந்து
கருவாடாகிப்போன என்
யௌவனக் குடுவைக்குள் இன்று
ததும்பி வழியும்
சிநேகப்பழரசங்களின்
தோட்டக்காரியும் நீ !

கொக்கை கொண்டு
கொய்திட முடியா
அந்த சந்திரன் தேசத்து
பால் நிலா போல ...

இந்த
இந்திரன் சுவாசத்து
உயிர் உலா என்றும் நீ !!!

- பிரகாசக்கவி -

பரிபாசைகள்


என்னவளே
உனதும்
எனதுமான உலகம்
கண்டங்களை கடந்து
இருகதிரைகளிடையேயான
இடைவெளிக்குள்ளாயிற்று
நமதானதேசத்தின் பரிபாசைகளாய்
வெட்கம்
மௌனம்
புன்னகை
கண்சிமிட்டல்
சின்னச்சின்ன கையசைவுகலென
ஐங்குறுமொழிகள்
நம் இதயகரும மொழிகளாக
இளவரசி உன் பூங்காவனத்தில்
எனக்கும்
நமதான சினேகப் பட்டாம்பூச்சிகளுக்கும்
உன்மலர்கரங்கள் ஊற்றிய தேநீர்
தேனமுதமுமாயிற்று !

- பிரகாசக்கவி -

முதல் சந்திப்பு


வெள்ளரிப் பிஞ்சொண்டு
வெட்கப்பட்டு சிவந்தத
கண்கொட்ட கொட்ட நான் கண்டன்
அவள் வெட்கி வெட்கி
திக்கி திக்கி கதைச்சத
கற்கண்டா நான் உண்டன்
காற்றோடு கதைபேசி
காதோரம் சரசரக்கும் முந்தானைக்கு
அவள் வெண்டக்காய் விரல்நான்கு செவிதிருக
செம்பெருத்தி அவள் கண்ணில்
என்னையே நான் கண்டன்

- பிரகாசக்கவி -

கண்மொழி

இந்த காகிதப்பூவிலும் வாசம்வீசுதடி
அந்த காமத்துப்பாலிலும் காதல்பேசுதடி
காந்தமும் கூட தோற்குதடி
உந்தன் கண்மொழி என்னை ஈர்க்குதடி
வார்த்தைகள் தொக்கி நிக்குதடி
வானவில்லும் உன்னைக்கண்டு சொக்குதடி
பைங்கிளியே உன்குரலை கேட்டபின்பு
கூவும் குயிலின் இனிமை கூட
எந்தன்காதில்
வல் வல் என்று குறைக்குதடி



- பிரகாசக்கவி -

படபடப்பு


கோடி மின்னழுத்தம்
கொடுவிப்பாயும் கம்பியில்
கொடும்பாவியகிப்போன
கொக்கு ஒன்றின் கடைநிலை யுத்தம்


- பிரகாசக்கவி -