Sunday, 31 August 2014

விருந்து


எனது வீட்டில் விருந்து அவர்களுக்கு

அவர்கள் இருவரும்
மாளிகைக்கு சொந்தக்காரர்கள்

ஒருவரின் மாளிகை முன்
வெள்ளையென்றும்
மற்றவர் மாளிகை முன்
அலரியென்றும்
அடைமொழி இருக்கிறது !

இவர்களைப்பற்றி
இன்னும் இன்னும் சொல்வதென்றால் ...

இருவருமே
கதிரைகளின் காமுகர்கள்

அதுமட்டுமல்ல

ஏற்கனவே
புஷ், கிளிண்டன், அம்மையாரென்று
பலரும் புணர்ந்துவிட்டுப்போன
கதிரையின்
காவலர்கள்

இரத்தமென்றால் இவர்களுக்கு
கொள்ளைப்பிரியமென்பதால்

AK 47 பொறித்து
கிரனைட் அவித்து
சைனைட் சாம்பாராக்கி
ஆட்லெறியை அமுக்குமுட்டை செய்து

பீரங்கி பீட்சா
புல்லட் புளியாணம்
ஏவுகணை எல்லுருண்டை
குண்டு குர்மா
சினைப்பர் சிப்ஸ் என்று
எல்லாம் விதவிதமாய்
சுடச்சுட இருக்கிறது !

இன்னும் என்ன
அவர்கள் வரும்வரை
ஊரெல்லாம் ஒப்பாரி வைத்து
காகங்கள் கரைந்து சாகட்டும்

- பிரகாசக்கவி -

31/08/2014

Sunday, 24 August 2014

கதையல்ல கற்பனை

புல்வெளியில்
பூப் பூத்து
பூ மரங்கள்
காய் காய்த்து
பாறைகள் பனித்துளியாகும்
ஓர் நாளில் !

இறைவன் நாடினால் ...

எருமை ஜனாதிபதியாகி
கழுதையை பிரதமராக்கும்
பன்னிக்குட்டி சபாநாயகர் ஆகும்

எலி, பூனை
பல்லி, பாம்புகள் அமைச்சர்களாக
பூச்சி, புழு, பூரான்கள் பிரதியமைச்சு ஏற்கும்

சிங்கம், புலி, சிறுத்தை
யானை, மான், கரடியென்று
ஒட்டுமொத்த ஜீவராசிகளும்
நாட்டுக்குள் படையெடுக்கும்

எந்திரங்கள் குட்டி போட்டு
காடுகளை ஆக்கிரமிக்கும்

அலுமினியம், ஈயம், பித்தளை
செம்பு, இரும்புயென்று
இன்னும் பிற உலோகங்களின் பயிர்ச்செய்கை
காட்டில் நடக்கும்

கடல்
குட்டையாகி
குடிநீர்
கோடிரூபா விலை போகும்

கோழிகளுக்காக
கீரிப்பிள்ளை குரல் கொடுக்கும்

வைரஸ்
வட்டிக்கடை நடாத்தும்

எயிட்சை
எபோலா குத்திக்கொன்று
விருது வாங்கும்

மாட்டு சந்தையில்
மனிதன் விலையாவான்

ஆடுகள்
கசாப்புக்கடை நடாத்தும்

முட்டைக்குள் உலகம் சுருங்கிப்போக
காற்று கண்ணயர்ந்து தூங்கும் !!!

- பிரகாசக்கவி -

24/08/14


Thursday, 21 August 2014

இனிப்பாய்போன கடல்



அவள் எச்சில் செய்துபோன
ஒருகோப்பை தேநீரில்

ஈ ஒன்று
முங்கிக் குடித்ததில்

சிந்திச்சிதறிய
சின்னத் துளிகள்

கரையைத் தாண்டி
கடலில் கலந்தன ...

என்னவோர் ஆச்சரியம் !

கடலெங்கும் இனிப்பகி
எறும்புகள் மொய்க்கின்றன ஒரு புறம் !!

அங்கே

சீனி வந்த மீன்களெல்லாம்
வைத்தியம் தேடி
அலைகின்றன மறுபுறம் !!! 

- பிரகாசக்கவி -

16/08/2014

Thursday, 14 August 2014

தரிசாகிப்போன காடொன்றின் கதை


அவனொரு பந்தை செய்தான்
அதுதன்னை அண்டம் என்றது

அவ்வழியோருவன் ஓடி வந்தான்

எட்டி உதைத்தான்
எம்பிக்குதித்தான்

மீண்டுமதுதன்னை வனாந்தரம் என்றது

அங்கே
பறவைகளும் விலங்குகளும் ஒன்றுகூடி
உதவி வேண்டுமென்றன...

போனால் போகட்டுமென்று
மௌனமாய் அதுவும் தலையசைத்து
செப்புங்கள் என்றது !

முதலில் விலங்குகள் வந்தன

ஓடியொழிய
உலாவித்திரிய

உண்டு மகிழ்ந்து
கூடிவாழ உன்

திருமேனி வேண்டுமென
அன்பாய் கேட்டன

ஆசையாய் யதுவும்
ஆமாமென்றது

மீண்டும் பறவைகள் வந்தன

பசியாற்ற பழமும்
தும்பு ,குச்சி, ஈர்க்குகளோடு
கூடு கட்டி குடும்பம் நடாத்த

உன் தலையில்
இடமும் வேண்டுமென

பரிவாய் இவைகளும் கேட்டன

பாசமாயிதுவும் தலையாட்டி
ம்ம்ம் ம்ம்ம் என்றது !

மனிதன் வந்தான்
எனக்கும் என்றான் ...

அண்ணார்ந்து அது
அவன்முகம் பார்ப்பதற்குள்

விறகு
வீடு
வீதியென்று
பின்
விபத்தென்றான்

- பிரகாசக்கவி -

13/08/2014

கடத்தல் ஒன்றின் நிழற்படம்


இதில் வெள்ளைவேன் இராது.

முகமூடி
துப்பாக்கி

பாழடைந்த பங்களா
பத்திரிக்கை செய்தி

வெட்டுக்குத்து
அழுகிய சடலம்

சுற்றிவளைப்பு
என்கவுண்டர்

இப்படி ஒன்றும் இராது

நீங்கள் இதை கொஞ்சம்
தலைகீழாய் பிடித்தால்

அங்கே

இடம்மாறிய இதயம்
நாட்டியமாடிய விழிகள்
ஊமையாய் போன மொழி
உஷ்ணமான உடல்களோடு

கொடும்வெய்யிலிலும்
கொட்டித்தீர்க்கும்
அடைமழையென

இன்னும் பலவும் இருக்கும்

- பிரகாசக்கவி -

11/08/2014


Wednesday, 6 August 2014

சதி விதைக்கும் சாத்தான்கள்


துரும்பு ஒன்றை திணித்து விட்டு

இரும்பை எல்லாம்
பலவந்தமாய்

தூக்கிச் சென்றார்கள் ...

துரும்பை நான்
கரும்பாக்கி கண்ணயர்ந்தேன்

எறும்பை மேயவிட்டு

தேன்கரும்பை
களவாடிப் போனார்கள் ...

எறும்பை நான்
எருமையாக்கி நிக்கையிலே

காதில் வந்து
கனிவாய் சொல்கிறார்கள்

மாடு உனக்கு
பால் எனக்கு என்று !!!

- பிரகாசக்கவி -

06/08/2014

Monday, 4 August 2014

முகமாற்று சிகிச்சை


என்னை

இரவும் 


இரவை

நானும் 


மாறி மாறி

திண்டு தீர்த்தத்தில்


பண் பாயின் ஓரம்


மிச்சமாய்


நான் மட்டுமே ஒட்டியிருந்தேன் !


அவர்கள்

பகலையும் 


பகல்

அவர்களையும் 

கரைத்துக்குடித்ததில் 


கடைசியில்


கசாய குப்பிபோல

அவர்கள் மட்டுமே


எஞ்சிப்போனார்கள் !!


ஆனால்

தினம் தினம்


அஞ்சாத

இரவும் பகலும்


முகம் மாற்றி மாற்றி

முத்தமிட்டுக்கொண்டன ...



- பிரகாசக்கவி -

03/08/2014

12.02pm