Friday, 29 April 2016

இராப்பந்தல்




அழைப்பிதல் பகிரப்படாத
சேட்டு வீட்டு
கலியாணப் பந்தல் அது
௦௦
மியூட் செய்யப்பட்ட
எல். ஈ. டி
தொலைக்காட்ச்சிப் பெட்டியாய்
காட்ச்சியளிக்கிறது
00
மின் விளக்கணைத்து
படம் போட்ட தியேட்டராட்டம்
இந்த இரவு
இசைந்து கொடுக்க
௦௦
மல்லாந்துகிடக்கும் என் கண்கள்
மணிக்கணக்கில்
மொய் எழுதித்தீர்க்கின்றன இந்த இரவுக்கு

- பிரகாசக்கவி
04062015

நான் இல்லாத பொழுது



உனதான கண்ணீரில் அலைமோதி
குடைசாய்ந்தது ஒரு கப்பல்
.....
சுறாக்களும்
திமிங்கிலங்களும் நிறைந்த கடலில்
துள்ளி விழுந்த புள்ளிமான் போல
சிக்கித்தவித்தது உனதான ஆன்மா
.....
இருட்டையும் இருட்டையும்
காதலிக்க கற்றுக்கொண்ட
துர்ப்பாக்கிய இரவாக
துப்பாக்கி ஏந்தி தவிக்கும்
உன் விழிகளின் பாரம் சுமந்து
சுக்குநூறாகிக் கிடக்கிறது வானம்
.....
இன்னும் உன்
பெருமூச்சு சுமந்த காற்றுக்கு
விட்டு விட்டு காய்கிறது
நெருப்புக் காய்ச்சல்

- பிரகாசக்கவி
29052015

Thursday, 28 April 2016

சத்தமிடாதீர்கள்


பர்மா எங்கள் நாடு
ரோஹிஞ்யா  என் நகரம்
உஷ்..........
சத்தமிடாதீர்கள்
௦௦
பூச்சி புழுக்களுக்கு அன்னமிட்டு
புண்ணியம் தேடும் தேசத்தில் வாழும்
கசாப்புக்கடை ஆடுகள் நாங்கள்
உஷ்..........
சத்தமிடாதீர்கள்
௦௦
எங்கள் கண்ணீரில்
பெருங்கடல் உருவாகும்
எம் தாகத்திற்கு
அதுவே மருந்தாகும்
உஷ்...........
சத்தமிடாதீர்கள்
௦௦
இறைவன் ஒருவனைத்தவிர
எங்களுக்கும் அவர்களுக்கும்
ரத்தம் ,சதை
வலி, மரணம் ,கண்ணீர்
எல்லாமே ஒன்றேதான்
உஷ்..........
சத்தமிடாதீர்கள்
௦௦
புத்தன் அங்கே உறங்குகிறான்
அவன் தூக்கம்
களைந்துவிடப்போகிறது
உஷ்.........
சத்தமிடாதீர்கள்
௦௦
வாடிப்போன அவன்
அரச மரங்களுக்கு பாய்ச்சும்
எங்கள் இரத்தங்கள் நின்றுவிட்டால்
அவன் மரம் செத்துப் போகக்கூடும்
ஆதலால் நீங்கள்
உஷ்...........
சத்தமிடாதீர்கள் !

- பிரகாசக்கவி
25052015

சுவர்


சுவாசம்முட்டி
உடம்பு வியர்த்தது அதற்கு ...!
பாவப்பட்ட சுவர்.
மனிதப்படைப்பு என்பதால்
கண், மூக்கு, வாய், கை, கால்கள் எதுவுமின்றி
நெட்டையாகவும்
குட்டையாகவும் அது நிற்க்க
அதற்கு
காதுகள் மட்டும்
ஆயிரமாயிரம்
முளைத்து முளைத்து உதிர்கின்றன
அவற்றில்
சில கடிக்கின்றன
பலதும் குடைகின்றன
இன்னும் ஓர் இரண்டில்
புகைவரப் பகை
வகை வகையாய் வளர்கின்றது ...

- பிரகாசக்கவி
19052015

யானைக்கும் அடி சறுக்கும் பூனையும் புலி பிடிக்கும்


இன்றைய எனது உலகம்
ஒரு மரத்தடிக்கு நகர்கிறது
௦௦
நகரும் அந்த உலகை நான்
இறகுகளால் வடிவமைத்திருக்கின்றேன்
௦௦
என்னால் மிதக்க முடியுமென்பதால்
பறக்கும் சில இலைகளை ரசிக்கிறேன்
அவற்றில் பெரும்பாலனவைகளுக்கு
பற்கள் இல்லை
முடிகளும் நரைத்துப்போயிருந்தன
௦௦
இன்னும் சில இலைகள்
கீழே விழுந்தன
00
என்னால்
தவழவும் முடியுமென்பதால்
கொஞ்சம் நெருங்கிப் பார்த்தேன்
௦௦
விழுந்த அந்த இலைகளிடம்
பற்களுக்கும்
சாயம்போகாத மயிர்களுக்கும்
அங்கு பஞ்சமிருக்கவில்லை
௦௦
மீண்டும் எனக்கு
நடக்க ஆசைவந்ததும்
ரெண்டெட்டு எட்டிப்பார்த்தேன்
௦௦
காற்று சுழன்றடித்தும்
பச்சமரங்கள்
பலமாக நிற்க
உளுத்த மரங்கள் அங்கு
துண்டு துண்டாகி
உயிரோடு வதைபட்டுக் கொண்டிருந்தன

- பிரகாசக்கவி
18052015

வசந்த கீதம்


உன்னாலும் என்னாலும்
வளர்க்கமுடியாத ஒரு பறவையை
நம் மூச்சிக்காற்றில் அடைகாத்து
பத்திரப் படுத்தியிருக்கின்றேன் ...!

அது

ஐந்தாறு கண்டங்கள்
ஆறேழு கடல்கள்
ஏழெட்டு பாலைவனங்கள்
ஒன்பது பத்து நதிகளென்று
கடக்க இருப்பதால்,

பத்து பதினைந்து ஒட்டகங்களிடம்
இரைப்பைகள் கடன்வேண்டி
நாளையதை நான்
வெள்ளோட்டம் அனுப்பவும் இருக்கின்றேன்

அது என்னைச்சுமந்து
உன்னிடம் வந்தவுடன்
அழுதுவிடாதே !

ஆரத்தழுவு ...
அள்ளியணை ...
கட்டிப்பிடி ...
கண்ணம்கடி ...
ஆசை முத்தம்கொடு ...
ஆனந்தநீர்
கண்ணோரம் கசிய
அன்பாய் சிரி ...

புன்னகை ஒன்றைத்தவிர
வேறொன்றையும் என்னால்
நம் பறவைக்கு
கற்றுக்கொடுக்க முடியவில்லை !

காரணம்

நாளைய வசந்தகாலங்களை முன்னிறுத்திய
நமது வாழ்வுக்கு
இன்று முதல்,
புன்னகை ஒன்றுதானே
நம் தேசத்தின் தேசியகீதம் ...!

- பிரகாசக்கவி
14052015

மூசாப்பு பொழுதொன்றின் சிறுகுறிப்புகள்



பேய் நெல்லுக்காயவெச்ச நேரம்பார்த்து
மஞ்சள் தேச்சிக்குளிச்ச
பின் அந்திவானம்
00
தேன் ஒழுகப் பால் ஒழுக
தேங்கிநிற்கும் மேகக்கூட்டம்
00
கொலவையிட்டுக் கூச்சலிட்டு
காக்கைக்கு கலியாணம்.
00
மூடுவந்த மச்சானாட்டம்
தேடிவந்து காதுகடிக்கும் காற்று
00
கச்சான் காலமடித்த
மச்சான் காற்றைப்போல வீசுவதால்
மரங்களுக்கெல்லாம் ஒரே மத்தாப்பு

- பிரகாசக்கவி
12052015

பிரிவின் வலி



சாகாவரம்பெற்ற
பிரிவுப்பிசின் ஒழுகும்
சயனைட் தீவில் இன்று
கண்கள் பிடுங்கப்பட்ட நான்
இதயம் கிழிந்த அவள்
மூச்சித்திணறிய நாங்களென ...
நிகழ்கால மாற்றங்களின் வழி
எங்கள் மனங்களில் மூண்டது
முதலாம் இதயப்போர் ...!

- பிரகாசக்கவி
08052015

நீ நான் இரவு



நடுஜாமம்
துணைக்கு நீயிருக்க
நம் திண்ணையில் நிலாவெளிச்சம்.
௦௦
பெருக்கன், பட்டாய்
சிந்திச் சிதறிக்கிடக்கிறது வானம்
பிடி பிடியாய் அள்ளியெடுத்து
மடி மடியாய் விசிறியது யாரோ ?
௦௦
நீ
உன்
தேனான இதழ்களில்
தெவிட்டாத சூட்ச்சுமங்கள்
சூடாகக் கொண்டுவா ...
௦௦
வெண்மையாகி வானெங்கும்
பூத்திருக்கும் சீனியதை
நம் உள்ளங்கையில் அள்ளிவச்சு
நீயும் நானும்
நட்ச்சத்திரங்களை
நக்கித் தின்னலாம் !


- பிரகாசக்கவி
02:00AM
03042015

வெள்ளை இரவு


வெண்மையைத்தவிர
நிறங்கள் பற்றி
சிறிதும் அறியாதவன் நான்
என்னிடம்
நிறமற்ற இரவு
நிர்வாணமாய் வந்திருக்கிறது !
அதற்க்கு ஆடை தைப்பது
எனது வேலையில்லையென்பதை
பட்டவார்த்தமாய்
அதனிடம் சொல்வது எனக்கு
மிகமிக இலகுதான்
இருந்தாலும்
என் வெள்ளந்திமனது
அதற்கொரு வர்ணம்தேடி
வானுயரப் பறக்கிறது ...
அங்கே
நிலாக்கொழுந்தின் நீள்துயிலில்
நிம்மதியாய் அமர்ந்து
நிசப்தங்களை ரோராட்டிச்
சீராட்டுகிறது வெள்ளை இரவு ..!


- பிரகாசக்கவி
01032015

பிரிவின் முதல் குறிப்பு



நேற்றும் இன்றுமான நம்வாழ்வின்
வசந்தகாலங்களான
பத்தொன்பதாம் திருத்தச்சட்டத்திற்கு
மயூரன், அன்ட்ரூ சான் போல
இன்னும் ஓரிருநாட்களில்
வந்துவிடப்போகிறது மரணதண்டனை !
அதுவரை,
நவீன
தொழில்நுட்ப சாதனங்களின் வழி
உன்னை நானும்
என்னை நீயும்
பார்த்தும், பேசியும்
நலன்கள் மட்டுமே விசாரிக்க முடியுமான
நாட்களையெண்ணி
நிலமதிர்ந்த நேபாளமாய்
நமது இதயங்கள்
நொந்துகிடக்கின்றன
உயிரில்லாப் புன்னகையை
உதிரியாய்
உதடுகளில் சுமந்தபடி ...


- பிரகாசக்கவி
28042015

மற்றுமொரு மழை இரவு



உலகின் தெருக்கோடியில்
பெரியதாய் ஒருமழை
நார்சாச் சோறுபோல கமகமத்து
மூக்கைத் துளைக்கிறது மண்வாசம்
டோச்சடித்துப் பார்க்கிறேன்
புளியாணம் காய்ச்சி
ஊரெங்கும்
ஊற்றி விளையாடுகிறது வானம்
அதை
மூக்கோட மூக்கோட குடிக்கின்றன
முற்றத்துக் குழந்தைகள்

- பிரகாசக்கவி 

12:37am
15/04/15

ஒரு மழை இரவு



ஒவ்வொரு துளியிலும்
ஒவ்வொரு ராஜக்குமாரிகளை
ஏந்திவருது மழை ...
ஐஸ் கிரீமில் குலைந்த அதன்
ஐஸ்வர்யமான உடலை உரசி
ரகசியம் பேசுது யன்னல் ...
காற்றின் மெல்லிடை வருடி
கமகமக்குது அவள் கூந்தல் ...
நல்லிரவுகளைத் தாண்டியும்
நாட்டியமாடுது விழிகள் ...
சின்னச்சின்ன சிறகுள் முளைத்த
பறவையிலேறி பறக்குது மனசு ...
பழுத்தகனவில்
சொண்டு கொத்தி இனிக்குது இரவு ..!


- பிரகாசக்கவி

20042015