Sunday, 12 April 2015

அவா


பட்டப்பகலில் என்னை நிக்கவைத்து
சுட்ட சூரியனை
இனி நான்
நட்டநடு இரவில் தட்டியெழுப்பி
கேள்வி கேட்ப்பேன் !
துணைக்கு
என் மகள் வருவாள் ...

- பிரகாசக்கவி -

கருத்தரிப்பு


துளியொன்றை என்னவள்
இப்போது சுமக்கலானால் ...
அது நதியாகி
என் மார்மீதும் தோல்மீதும்
நாளை தவழும் ...
அதை
மான் என்றும் தேன் என்றும்
என்னவள் கொஞ்சுவாள் ...
பின்
உயிரென்றும்
ஈரக்கொழுந்தென்றும்
நான் அதைக்கொஞ்சி
என்னவளை விஞ்சுவேன் ...

- பிரகாசக்கவி -

காதலர் தினம்


தலைமுறைகளை தின்னுமுனக்கு
தரித்திரமென்று பெயர் வை ...
வரையறைகளையும்மீறும் கழிவறையுனக்கு
காதலர்தினமென்றொரு மடை வை ...!



- பிரகாசக்கவி -

ஊடல்


சொண்டுடைந்த
மரங்கொத்தியொன்றின் அவஸ்தையாய்
ஒரு முறிவுச்சத்தம்
மூன்றாம் உலகப் போரானது !
ஆதலால்
ஒருசோடி இதயத்தின் ஒப்பாரியோ
ஊமையாய் கரையுது ...
பின்,
அண்டத்தையே சுருட்டி
அடுப்புக்குள் வைத்திடும் மௌனம்
ஆறறிவை பிழியிது ......

- பிரகாசக்கவி -

ஒழுப்பம் பாசமும் ஒருகொத்து நேசமும்


தொடுவானமாய்
தொங்குது வானம்
கண்ணயர்ந்து தூங்குது கடல்
மீசைமுறுக்கிய மேகங்களை பிடித்து
மொட்டையடித்து
சவரம் செய்கிறது காற்று
இதற்கிடையில்தான் நடக்கிறது
நமதான இனிப்பு
சில கச்சான் சுருல்களோடு
உனதான பிஞ்சு விரல்கள்
அங்குமிங்கும் தவழ்ந்து,
ஓடிவந்து என்
விழிகளை முத்தமிட்டு கடக்க
ஒரு வண்ணத்தும்பியாய் நீ பறந்தாய் ...
என் ஒழுப்பம் அன்பில்
கலந்து இருந்தது
உன் ஒரு கொத்து நேசம் !!!



- பிரகாசக்கவி -

தன்னம்பிக்கை

எனக்கு
சிறு குருவியின்
அல்லது
அரும்பறவையின் சிறகுகளை
கடன் வேண்டித்தாருங்கள்
விடிவதற்குள்
ஒரு நதியையும்
உயிர் பிரிவதற்குள்
பெருங்கடலையும் கடந்தாக வேண்டும் ...
நேற்று
கனவில் நான் கொத்தித்தின்ற
எவரட்ஸ்பழத்தின் ருசி
என் எச்சிலில் குறைந்து போவதற்குள் !



- பிரகாசக்கவி -

புனைவு


துண்டுநிலவை
துப்பியிருந்தது வானம் !
மண்சட்டியில்சுண்டவச்ச
நேத்தைய
நெத்தலிமீன் பாலானம்போலது
தண்ணிக்குரச்சிக்குள்ள தகதகக்க
அடுப்பங்கரை பூனையொன்று
அதை நக்கிப்பாக்குது
அதில் துள்ளியெழும்
மீன்குஞ்சின் கவனமோ
கடலைத் தேடுது !!!

- பிரகாசக்கவி -

உயிர் நிலா


அழவும்
ஆசுவாசமின்றி
உலாவமட்டுமே முடியுமான நாளொன்றில்
மூர்ச்சையாகி கிடந்த என்னை
சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தவள் நீ !

காய்ந்து
கருவாடாகிப்போன என்
யௌவனக் குடுவைக்குள் இன்று
ததும்பி வழியும்
சிநேகப்பழரசங்களின்
தோட்டக்காரியும் நீ !

கொக்கை கொண்டு
கொய்திட முடியா
அந்த சந்திரன் தேசத்து
பால் நிலா போல ...

இந்த
இந்திரன் சுவாசத்து
உயிர் உலா என்றும் நீ !!!

- பிரகாசக்கவி -

பரிபாசைகள்


என்னவளே
உனதும்
எனதுமான உலகம்
கண்டங்களை கடந்து
இருகதிரைகளிடையேயான
இடைவெளிக்குள்ளாயிற்று
நமதானதேசத்தின் பரிபாசைகளாய்
வெட்கம்
மௌனம்
புன்னகை
கண்சிமிட்டல்
சின்னச்சின்ன கையசைவுகலென
ஐங்குறுமொழிகள்
நம் இதயகரும மொழிகளாக
இளவரசி உன் பூங்காவனத்தில்
எனக்கும்
நமதான சினேகப் பட்டாம்பூச்சிகளுக்கும்
உன்மலர்கரங்கள் ஊற்றிய தேநீர்
தேனமுதமுமாயிற்று !

- பிரகாசக்கவி -

முதல் சந்திப்பு


வெள்ளரிப் பிஞ்சொண்டு
வெட்கப்பட்டு சிவந்தத
கண்கொட்ட கொட்ட நான் கண்டன்
அவள் வெட்கி வெட்கி
திக்கி திக்கி கதைச்சத
கற்கண்டா நான் உண்டன்
காற்றோடு கதைபேசி
காதோரம் சரசரக்கும் முந்தானைக்கு
அவள் வெண்டக்காய் விரல்நான்கு செவிதிருக
செம்பெருத்தி அவள் கண்ணில்
என்னையே நான் கண்டன்

- பிரகாசக்கவி -

கண்மொழி

இந்த காகிதப்பூவிலும் வாசம்வீசுதடி
அந்த காமத்துப்பாலிலும் காதல்பேசுதடி
காந்தமும் கூட தோற்குதடி
உந்தன் கண்மொழி என்னை ஈர்க்குதடி
வார்த்தைகள் தொக்கி நிக்குதடி
வானவில்லும் உன்னைக்கண்டு சொக்குதடி
பைங்கிளியே உன்குரலை கேட்டபின்பு
கூவும் குயிலின் இனிமை கூட
எந்தன்காதில்
வல் வல் என்று குறைக்குதடி



- பிரகாசக்கவி -

படபடப்பு


கோடி மின்னழுத்தம்
கொடுவிப்பாயும் கம்பியில்
கொடும்பாவியகிப்போன
கொக்கு ஒன்றின் கடைநிலை யுத்தம்


- பிரகாசக்கவி -