Tuesday, 30 September 2014

உளுந்துவடைகளின் உச்சி மாநாடு

ஏற்கனவே திட்டமிட்டபடி

உள்ளூர் சந்தையில் இருந்து

நாற்ற மீன்,
அழுகத் தேங்காய்,
அவிஞ்ச தக்காளி,
கூழ் முட்டை,
பலாக்கொட்டை என்று

வரவழைக்கப்பட்ட பலராலும்
ஆசனங்கள் நிரம்பி வழிந்தன

வட்டா வைத்து
அழைத்து வந்த
வெளியூர் நசல்க்கோழியை

உள்ளூர் உளுந்துவடைகள்
கும்பிடு போட
கூட்டமும் ஆரம்பமாகின

ஒவ்வொரு வடையாய்
உரையாற்ற ஆரம்பித்து
உளுந்துவடை முடிக்கும்போது

நாளை முதல்

பருப்பு வடை விற்பனைக்கு
தடை உத்தரவு வேண்டும் என்றும்

உளுந்து வடையின் பெயர்
ஓட்டை வடை என்றே
அழைக்கப்பட வேண்டும் என்றும்

ஓட்டை வடை மட்டுமே
இந்த நாட்டின்
தேசிய வடை என்றும்

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

இறுதியாய்

ஓட்டை வடை விற்பனைக்கு
தன் செத்தகோழிகள்
உதவி செய்யும் என்று
நசல்க்கோழி வழங்கிய உறுதிமொழியுடன்
கூட்டம் இனிதே நிறைவு பெற்றது !


 - பிரகாசக்கவி -

28/09/2014

Thursday, 25 September 2014

நிலாத்திருடன்

நிலவை காணவில்லையாம்

உலகே ஒன்று கூடி
காவல் நிலையத்தில்
கண்ணீர் சிந்துகிறார்கள்

ஆனாலும் பாவம்தான் அவர்கள்

ஏனெனில்

அதை திருடி
அவன் காதலிக்கு
படையல் வைத்தது

பக்கத்து வீட்டு கவிஞனாயிற்றே ...


- பிரகாசக்கவி  -

கிழட்டு மாடு


அவித்து

கடித்திழுத்து சப்பியபோதும்

மிருதுவாகிட மறுத்ததை

சவ்வு என தூக்கி வீசி

என்னவள்

கிழட்டு மாடென
கினு கினுத்து
தீரும் போது

எனக்குள் தோன்றியதெல்லாம்

அவியாத ஒரு துண்டில்

அழியாமல் இருப்பது

அதன் வீரமும்
மானமும்தான் என்று !


- பிரகாசக்கவி -
24/09/2014

பாசாங்கு


நரம்பறுந்த வீணைகளை வைத்துக்கொண்டு
நாதம் இசைக்கச்சொல்லி அடம்பிடிக்கின்றீர்கள்

எத்தனைமுறை முயற்சித்தாலும்

அந்த முயற்சிகள் எல்லாம்
கடலில் விழுந்த கண்ணீராய்
காணாதுதான் போகுமென்பதை நீங்கள்

ஒருபோதும்
எண்ணிப்பார்க்க
எண்ணுவதே இல்லை

இசைக்கின்ற வீணைகளைவிட
இசைப்பதாய் அசைகின்ற விரல்களின்
இரசிகர்கள் நீங்கள் என்பதால்


- பிரகாசக்கவி -

20/09/2014

தாகம் தீர்த்த குருவிகள்


வற்றிய குளம் ஒன்றின் அருகில் நின்று
எருமைகள் அழுதுகொண்டு நின்றன...

காரணம் அறிந்ததும்
நீராட வந்த யானைகளுக்கு
ஒரே ஆச்சரியம் !

அவைகளின் காதுகளை
அவைகளாலே நம்ப முடியவில்லை

மீண்டும்
தவளைகள் வேறு
தலையாட்டி தொலைத்தன

மீன்களும் அங்கில்லை

சினம் கொண்டந்தயானைகள்

மூர்ச்சையாகி
மல்லாந்துகிடந்த முதலைகளை
மிதித்து கேட்டபோதுதான்
அவைகளுக்கு ஞானம் பிறந்தன

தாகமெடுத்த பல குருவிகள்
சேர்ந்து குடித்தால்
குளமென்ன
கடலும் வற்றிப்போகுமென்று !


- பிரகாசக்கவி -
22/09/2014


பொன்னாடை


காத்திருந்து
காதலர்கள் -மெய்
தழுவிக்கொள்வதில்
கன்னி எனக்கு
முதலிரவுதான்
முழுநாளும் அப்போது ..!


மூச்சுமுட்ட
முப்பது தோள்களில்
முக்காடிட்டு கிடப்பதால்
கற்பழிப்புதான்
கன்னி எனக்கு
தினம் தினம் இப்போது !

பொன் என்ற -என்
பெண்னாடைக்கு
பெறுமதி கிடைப்பதுதான்
எப்போது ?


-பிரகாசக்கவி-


எழுச்சி


இயேசுவின் விதிக்கு இசைவாக்கம் கண்ட
ஒரு கூட்டத்திலிருந்து
எனது விதியை நிறுவுவதற்காக
நியூட்டனின் விதியின் கீழ்
நிமிர்ந்து நிற்கின்றேன்
ஒரு அடியேனும்
திருப்பி அடிக்கமுடியுமென்ற நம்பிக்கையில்



- பிரகாசக்கவி -

21/09/2014

Saturday, 20 September 2014

பறத்தலுக்கான சூத்திரம்



பறவைக்கு !
ஒரு வானம்
ஒரு பூமி
இரண்டு இறக்கைகள்
எமக்கு
ஒரு பூமி
ஆயிரம் கனவு
இலட்சம் வாசல்கள்
நம்பு ...
முயற்சி ...
தவழு,
நட,
ஓடு ...
முன்னேறி
பற, பற, பற .........

- பிரகாசக்கவி -

19/09/2014

Friday, 19 September 2014

வாழ்வும் சாவும்


நேற்றும் இன்றும்
பல பாய்கள் சுற்றப்பட்டன .

இன்றோ நாளையோ
எனது பாயும்
சுற்றப்பட்டே தீரும் .

அன்று
ஆதாமும் ஏவாளும்
விரித்து சுற்றிய பாய்தான் இது !

என்றோ ஒருநாள்

விரித்தவன்
சுருட்டி எறியும்வரை

விரிந்தேதான் கிடக்கப்போகிறது ...

உறங்கவும்
விழிக்கவும்
அவனை துதிக்கவுமென



- பிரகாசக்கவி -

18/09/2014


உங்கள் பயணம் இனிதே முடிந்தது !

எங்கிருந்து வந்தீர்களோ
அங்கே மீண்டு விட்டீர்கள் ...

அரசியலில்

யானையாய்
நீங்கள் இருந்த போதெல்லாம்
பாகனும் நீங்களாகவே இருந்தீர்கள்

ஓடமாக
நீங்கள் இருந்த போதெல்லாம்
எங்களை கரைசேர்க்கும்
துடுப்பாகவும் நீங்களே இருந்தீர்கள்

நீங்கள் ஒருபோதும்
விதை நட்டு
மரம் வளர்க்கவே இல்லை
விதையாய்
நீங்களே இருந்து
மரமாகவும் வளர்ந்தீர்கள்

அதனால்தான்

புல்லுருவிகளும்
நாயுருவிகளும்
நமதுமரத்தை அண்டவே இல்லை

ஏனென்றால்
பீடைகளுக்கு நன்கு தெரியும்
நீங்கள்
களைநாசினிகளுக்கெல்லாம் களைநாசினியென்று

உங்கள் பயணம் இனிதே முடிந்தது

எங்கிருந்து வந்தீர்களோ
அங்கே மீண்டு விட்டீர்கள்

ஆனால் இன்று

உங்கள் பெயர்சொல்லும்
வாலறுந்த பல்லிகள் எல்லோருக்கும்
வாய்க்கட்டு பலமாகவே இருக்கிறது
அத்திவாரங்களை தவிர

அதனால்தானோ என்னவோ தெரியவில்லை

எங்களை
நட்டாற்றில் விட்டுவிட்டு

அவர்கள் எல்லோரும்

இன்னும் இன்னும்
பதவி விழுங்கும் முதலைகளாக
தெப்பக்குளத்தில் நீந்துகின்றார்கள்

நீங்கள் தீர்க்கதரிசி

ஆனால் இவர்களோ
எமக்கு வாய்க்கரிசி

நீங்கள் சொன்னது போல

தலைவர்கள் ஒரு போதும்
மரணிப்பதில்லைதான்

அதற்கு
எங்கள் மனங்களில் வாழும்
நீங்களே சாட்சி

ஆகமொத்தத்தில்

தலைமைத்துவம் இன்றி
தினம் தினம்
செத்துப் பிழைக்கும்
வாடிய பயிர்களுக்கு

என்றுமேயில்லை மீட்சி !

- பிரகாசக்கவி -

16/09/2014


Thursday, 18 September 2014

உணர்வுகளின் உஷ்ணம்


1.
உணர்ச்சிகளின்
உஷ்ணம் என்பது பொல்லாதது
கடைநிலை ஆயுதமாய்
கண்ணீரை சிந்திவிட்டு
வடிகட்டப்படாத
வார்த்தைகளாலும்
வழுக்கிவிழும் வர்ணனைகளாலும்
வாஞ்சை கொண்டு விடுகிறது ...

2.
அன்பது அப்படித்தான்
அர்த்தமின்றி
ஆசை கொள்வதும்
பொருத்தமின்றி
பொறுமை கொள்வதும்
வருத்தப்பட்டு
வாழ்வை கொல்லுவதும்தான்
அதற்கு வாடிக்கை ...

3.
வெறுப்பு என்பது
வேதாந்தங்களுக்கு அப்பாட்பட்டது
அது வேப்பமர பேய்களுக்கும்
முருங்கைமர முனிகளுக்கும் முட்டுப்போட்டது !

- பிரகாசக்கவி -

13/09/2014

கலியாண சந்தை


உளிதீண்டா சிலை ஒன்றை

வரன் தேடிப்போனது ...

கொல்லன் தெருவில் கொஞ்சம்
கள்ளன் தெருவில் கொஞ்சமென சுற்றியது

தன்னை
தங்கம் என்றது

ஈற்றில்

உரசுவாரில்லா அத்தெருவில்

சிலைமட்டும் சிக்கி
சின்னாபின்னமானது


- பிரகாசக்கவி -

15/09/2014

அரக்கொட்டியன்


கும்பிடுதட்டான்கள்
கூடிப்போனதால் ...

வெட்டுக்கிளிகளுக்கும்
வண்ணத்துப் பூச்சிகளுக்கும்
வாழ்வற்றுப் போயிற்று !

தவளைகளை தின்று வாழ
நிர்ப்பந்திக்கப்பட்ட பாம்புகளை போல்
இன்றைய ஓணான்களுக்கும்
பதவியெனும் புகையிலை
போதையாகிப்போனதால் !

ராத்திரியின் ரம்மியத்தை
ரசனையூட்டி
பகலை
பதுங்கு குழியாக்கும் மின்மினிகள்

தீயை
தீனியாக்கி
தீக்குளிக்கும் ஈசல்கள்

கசாப்பு கடைக்காரன் வீட்டில்
கருணையோடு வளர்க்கப்படும்
ஆடுகள் வரிசையில்

நாளைய பொன்வண்டுகளும்
சிலந்திவலையில் சிக்கி
சின்னாபின்னமாகும்

- பிரகாசக்கவி -

09/09/2014

நீர் வற்றிய நிலம்

வறண்ட பூமியின்
உலர்ந்தத மேனியை
துலாவி பார்கின்றேன் ...

வனப்பிழந்த கிழவியை போல்
சருமம் ஒட்டிக்கிடக்கிறது !

பருவமங்கையின்
பளிங்குமேனியாய் பளபளத்த
அதன் பருவகாலங்களை எண்ணிப்பார்கின்றேன் ...

இளமையெனும் ஊஞ்சலாய்
இவள்மேனியில் ஊஞ்சலாடிய நதியும்

அதன் ஜதியும்
என் நெஞ்சான்கூட்டில்
இன்னும் தொக்கி நிற்கிறது ...

இவளை ஜொள்ளுவிட்டு
பல்லிளித்த பலரையும்
இன்றிங்கு காணவில்லை !

அவர்கள் எல்லோருக்கும்
குழாய்க்கிணறு என்னும்
காதலிகள் கைவசம் இருப்பதாய்
இவள் வளர்த்த குருவியொன்று
இரங்கல் சொல்லிப்போகின்றது !

பாவம்
மரம்,செடி,கொடி,புற்பூண்டுகலேன்னும்
இவள் தோழிகள்

சூரிய தீக்குளித்து
எலும்பும் தோலுமாய்
அந்திமக்காலங்களை
எண்ணியபடி கிடக்கின்றார்கள் !

திடீரென்று தாகமெடுக்க
அங்குமிங்கும் அலைகின்றேன்

எதிரே
விறகேற்றிய ஒரு வண்டியைத்தவிர
வேறு ஒன்றுமில்லை அங்கு
என் தாகம் தீர்க்க !


- பிரகாசக்கவி -

10/09/2014

Thursday, 4 September 2014

சுதந்திரம்


ஒரு சொல்
ஏட்டில் எழுதப்பட்டிருந்தது

அந்த சொல்

நானும் நீங்களும்
காதால் கேட்டும்
வாயால் மொழிந்தும்

கண்களாலும் கால்களாலும்
வலைவீசி
தேடிய ஒரு சொல்

காந்திக்கு முன்னும் பின்னுமென
பலரும் சுவாசித்த
ஒருசொல்தான் அந்தச்சொல்

என்றாலும்

இன்றும் நாளையும்
பலருக்கும் எட்டாக்கனியான
ஏற்றமிகு சொல்லும் இதுதான்

இந்த சொல்லின்
மகத்துவம் பற்றியும்

அதன்
தேவை பற்றியும் தெரிந்துகொள்ள

பேராசிரியர்களோ
அல்லது
பெருந்தலைவர்களோ
எனக்கு தேவை இல்லாததால்

ஈழத்தில் இருந்தும்
பலஸ்த்தீனத்தில் இருந்தும்
இரு பிஞ்சுகளை அழைத்து
அந்த சொல்லை
அவர்கள் கரங்களில் திணித்தேன்

அதற்கு பகரமாய் அவர்கள்

யாரால் ?
யாருக்கு ?
எச்சந்தர்ப்பத்தில் ? என்று எழுதிய
வினாக்களை
என்கையில்
தந்துவிட்டுப் போகிறார்கள் 

- பிரகாசக்கவி -

04/09/2014