Friday, 5 December 2014

ஆழ்துளை குடிநீர்

மண்மடிகாய்தலின் மரணவிசம்,
பச்சை குழந்தைகளின் வன்கொடூரம் !

ஆழ்துளையினில் அர்ப்பசுகம்
வீட்டுக்கு வீடு
குழாய்ப்பசுக்களின் குட்டியுகம் !!


- பிரகாசக்கவி -

மதிகெட்டதனம்


முள்ளில் சிக்கியிருக்கிறது துணி
மீட்டெடுத்தலுக்கான சூத்திரம்
ஒரு குடிகாரனின்
குருட்டுமொழியாய்
வந்துகுவிகிறது
முள்ளை திட்டித்தீர்ப்பதிலும்
துணியை எட்டிப்பர்ப்பதிலுமாக
கடந்துபோகிறது ஒரு கூட்டம்
ஒரு தீச்சுவாலையோடு ஒருவன்
வருகின்றான்
முள்ளை சுட்டெரிக்கவும்
முள்ளின் விசம்பறிக்கவுமான வித்தைகள்
தனக்கும்
தன் தீச்சுவாலைக்கும் மட்டுமேயிருப்பதாக
கட்டியம்கூறி நிக்கின்றான்
எல்லோரும் அவனை
அதிசயப்பிறவியாய் பார்க்கிறார்கள்
கைகொடுக்கிறார்கள்
கட்டியணைக்கிறார்கள்
கற்பனையில் மிதக்கிறார்கள்
இத்தனைக்குமவன்
சேலைபற்றியோ
சேலையுடுத்திருப்பவளின் மானம்பற்றியோ
ஒருவார்த்தைதானும் பேசியிருக்கவில்லை !



- பிரகாசக்கவி -

02/12/2014
8:20pm

அரசியல் நாற்றம்

காற்றை கொலை செய்து
கோணிப்பையில் கட்ட திட்டம்

குளிர்ந்து போயல்லவா கிடக்கிறது
அதன் ஒற்றைக்கண்ணை நோண்டியது யார்
திக்குத்திசையின்றி முட்டி மோதுகிறதே ...


இல்லை
அதன்காலை யாரும் உடைத்திருப்பார்களோ
தத்தி தத்தி தவுகிறதே ...

பாவம் அது
ஒரு வேளை
இலங்கைப்பக்கம் ஒதுங்கியிருக்கவேண்டும்
அரசியல் நாற்றம்
அதை தாக்கியிருக்கவேண்டும்
இல்லையென்றால்
இதுக்கு எப்படி
இவளவு விசறு !!!


- பிரகாசக்கவி -

01/12/2014
11:55pm

தவிப்பு

ராவெல்லாம் ராசாத்தி
உன் நெனப்புதா புள்ள
ராப்பகலா தூக்கமில்ல ...

உன் பூமுகத்த பார்க்குமுன்ன
எனக்கு தலகால்புரியிதில்ல
தாகம் கூட எடுக்குதில்ல ...


பிளேனேறி இறங்குமட்டும்
என் கல்பெல்லாம் நீதா புள்ள
யார்கிட்ட நான்போயி யிதசொல்ல ?


- பிரகாசக்கவி -

29/11/2014

Sunday, 16 November 2014

சூன்யம்


அட்சரங்கள் அத்தனையையும் திருடி
ஆட்டுக்கொட்டகையொன்றில் மேயவிட்டுவிட்டு
பூச்சியங்களைமட்டும் நிலையாகவும்
கிடையாகவும் நிறுத்தி
பெறுமானங்காண முயற்சித்ததன் நிகழ்தகவாய்
நீட்டி நிமிர்ந்து
ஆற அமர மல்லாந்துகிடக்கிறது அவன்பெருவெளி
அதில் உச்சிக்கொட்டும் உச்சிவெய்யிலின்
எச்சில்முத்த கானல்நீர்கொண்டு கைகழுவி
கால்நனைக்கும் அவன் பிச்சைமொழிகள்
சிறுமீன்தூண்டிலொன்றை மலையின்மீதெரிந்து
ஏலேலோ ஐலசா பாடும்குரல்களை
கும்பிடுபோட்டு பிடிக்கின்றன ...



- பிரகாசக்கவி -

15112014

Tuesday, 11 November 2014

நூற்றாண்டின் நூதனப்பொய்கள்


அவன்
அவனது உறுப்பை
அறுத்துக்கொண்டான்

அவள்
அவளையே
கற்பழித்துக்கொண்டாள்
அவர்கள்
அவர்களையே
சிலுவையிலும் அரைந்துகொண்டார்கள்
இப்படியாய்
பலதும் இருந்தது அந்த செய்தியில்
அவற்றையெல்லாம் நான்
வடிகட்டமறந்த பொய்கள் என்று
அனுமானித்துக்கொண்டபின்
என் கற்பனைக்கடலில்
ஆறடி ஆத்மா ஒன்றை
வரைந்து கொண்டேன்
அது மனிதனென்னும்
கூடு சுமந்த
ஐயரிவுகளின் புனைவு யென்பதால்
அதற்கு
காக்கிச்சட்டை
கருப்புத்தொப்பி
காலுக்கு பூட்டென அணிவித்து
அதன் கையில்
துப்பாக்கி ஒன்றையும் திணித்தேன்
என்னவோர் அதிசயம்
அது தன்னையொரு
இலங்கை போலிஸ் என்று
என்னோடு கை குலுக்கிக்கொண்டது


பிரகாசக்கவி

எம் பீ அன்வர் -

18/08/2014

Friday, 7 November 2014

மரணமெனும் நானும் மனிதமெனும் நீயும் !


நானும் நீயும்
நண்பர்கள்தான் ......

தாயின் கருவறையிலிருந்து
துள்ளிக்குதித்து
அம்மாவென்று
சத்தம் போட்டுக்கத்தி
தாயெனும் உன்
முதலுறவோடு நீ
சேர்ந்து கொண்டாய்
வாழ்வெனும் தொடரில்
இணைந்தும் கொண்டாய் .....

இத்தனைக்கும்
நானும் நீயும்
நண்பர்கள்தான்

குழந்தையென்றும்
சிறு பிள்ளையென்றும்
வயது வந்த
காளை யென்றும்
வேடங்களில் எல்லாம்
கச்சிதமாய் பொருந்திப்போனாய்

இத்தனைக்கும்
நானும் நீயும்
நண்பர்கள்தான்

மனைவியென்றாய்
மங்கையொருத்தியை
மனந்துகொண்டாய்
பிள்ளையென்றாய்
பின் உழைப்பு என்றாய்
முதுமையென்று
முடங்கிக்கொண்டாய்

இத்தனைக்கும்
நானும் நீயும்
நண்பர்கள்தான்

பணம் தேடினாய்
பொருள் தேடினாய்
ஏன்
சொந்தம் பந்தம்
சொத்து சுகமென்று
பலதும் தேடினாய் .

இத்தனைக்கும்
நானும் நீயும்
நண்பர்களாயிருந்தும்
என்னை நீ
நினைக்க மறந்தபோதும்
உன்னை நான் மறவாமல்
உன்னோடு
இணைந்து கொள்ளும்
பொழுதுகளில்மட்டும் ஏன் அழுகிறாய் ?

பிரகாசக்கவி -


தேர்தல்காலம


மொட்டைத்தலைக்கும்
முழங்காலிற்கும்
முடிச்சுப்போடும்
மூடர்களும்

ஓடுகின்ற மாட்டில்
இறைச்சி உண்ணும்
ஓநாய்களும்

ஓசியில் வயிறு வளர்த்து
ஏவுரை விடும்
காக்காய்களும்

வீர வசனம் பேசும்
தேங்காய்ப்பூ
சண்டியர்களும்

உங்கள் வீடு தேடிவரும்
காலம் இது

என் சமுகமே
தூங்கியது போதும்
விழித்தெழு

பசுத்தோல் போர்த்திய
புலிகளின்
பசப்பு வார்த்தைகளில் ஏமாந்து விட்டால்
அரசியலில்
அபிலாசைகளை மட்டுமல்ல
அப்ப துண்டுகளைக்கூட பெறமுடியாது
நம்மால் 

 

பிரகாசக்கவி


பொன்னாடை




காத்திருந்து
காதலர்கள் -மெய்
தழுவிக்கொள்வதில்
கன்னி எனக்கு
முதலிரவுதான்
முழுநாளும் அப்போது ..!

மூச்சுமுட்ட
முப்பது தோள்களில்
முக்காடிட்டு கிடப்பதால்
கற்பழிப்புதான்
கன்னி எனக்கு
தினம் தினம் இப்போது !

பொன் என்ற -என்
பெண்னாடைக்கு
பெறுமதி கிடைப்பதுதான்
எப்போது ?

பிரகாசக்கவி -

தூரத்து பயணம்



இலட்சியங்களின்
முதுகிலேறி
ஒட்டக தேசத்துக்கான
பயணமிது!

அம்மாவும்
அப்பாவும்
அழுது ஆசிகள் பல கூற

அண்ணனும்
தங்கையும்
முத்தங்கள் பரிமாற

ஏக்கத்தோடு மனைவியும்
பாசத்தோடு பிள்ளைகளும்
பாவமாய் பார்த்திருக்க

விரும்பியும்
விரும்பாமலும்
விரைந்து செல்லும் பயணமிது

ஓராயிரம்
இலட்சியங்களின் முதுகில்
ஒற்றை வீரனாய் .

பணமெனும்
பள்ளத்தாக்குகளைத் தேடிய
பயணமிது .!

ஒருவேளை
அம்மாவும் அப்பாவும்
செத்துப்போயிருக்கலாம் .....!

மனைவி பிள்ளைகள்
நோயினால்
நொந்து போயிருக்கலாம் ....!

ஏன்
எனக்கு கூட
வழுக்கை விழுந்துவிடலாம் ....!

ஆனால்
நானும் என் கனவுகளும்
முடிவிலியாய் ..................
பணமெனும் பள்ளத்தாக்குகளை நோக்கி .........



-பிரகாசக்கவி-

21.12.2012

Tuesday, 4 November 2014

மலையுண்ட வீடு


கன்னி, மொட்டு, பூ, காய், பழமெல்லாம்
சாமான்யமாய் உதிர்ந்தன
மலையை அவன்(இறைவன்) உசுப்பி
சருகுதிர்த்ததில்
தவங்கிடந்து வரம்கேட்டு
செவிமுளைத்த காற்றலைகளின்
ஒலிப்பறை வெடித்து இரத்தஞ்சொட்ட
அதன் ஈரல்க்குலையே நடுநடுங்கியது
தொரைமார் கிள்ளிய
கிள்ளுக்கீரைகளின் அழுகுரல் கேட்ட

  பிரகாசக்கவி -

- 01/11/2014

இலங்கை பதுளை  மாவட்டம் கொஸ்லந்தை என்ற ஊரில் இடம்பெற்ற 
மண்சரிவு அனர்த்தத்தின் துயரத்தால் என் உள்ளத்தில் கசிந்த கவிதையிது

வாக்குத்தேடும் வள்ளல்கள்


பழையகுருடி கதவைத்திறடியென்னும்
முதுமொழிக்கிணங்க
மீண்டுமந்த பங்களாவின் கதவுகளை
ஆண்டுகள் ஐந்தாவதன் முன்பே
பூதங்கள் திறந்தன
புத்திமான் பலவான்களின்
புத்தியைக்கெடுக்க
அலாவுதீன்களின் விளக்குகளில்
அற்புதங்களின் திறவுகோலாய் அந்த
அன்டக்கா கசமும்
அபூக்கா குக்குமும்
திறந்திடு சீசேவாய் ஜொலிஜொலிக்க
கூரைகளின் முகடுகளை நோக்கி
விக்ரமாதித்தன்களால்
பசும்பொன்னில் வார்த்தெடுத்த
நெல்மணிகள்
விசிறப்படுகின்றன புறாக்களைத்தேடி
ஆனால் வந்ததும் வருவதும்
வரவிருப்பதுமென்னவோ
எலும்புக்கு அலையும் நாய்கள்
மட்டுந்தான்


- பிரகாசக்கவி -

29102014

இரத்தம் கசியும் கடல்



அந்த துயரச்செய்தியை
நதிகள் சுமந்து வந்து
கடலில் பிழிந்தன

கடல்கரைந்து இரத்தம்கசிந்தது

நதிகளிடம் அந்த செய்தி
ஆறுகள்வழி வந்திருக்கவே
வாய்ப்புகள் இருந்தன
ஆறுகளுக்கு எப்படித்தெரியுமது

நிச்சயம்
கொஸ்லந்தை மலைமுகடுகளை முத்தமிட்டு வழிந்தோடிய
கண்ணீர் அருவிகளைச்சுமந்த
ஓடைநீர்தான் சொல்லியிருக்கவேண்டும்
உயிர் உறைந்த அந்த
உதிரச்செய்தியை


- பிரகாசக்கவி -

02/11/2014
இலங்கை பதுளை  மாவட்டம் கொஸ்லந்தை என்ற ஊரில் இடம்பெற்ற 
மண்சரிவு அனர்த்தத்தின் துயரத்தால் என் உள்ளத்தில் கசிந்த கவிதையிது

பிடிக்காததை செய்தலின் வலி


கழுத்தறுபட்ட கோழியென
இலட்சியமும் ஆசைகளும் துடிதுடிக்க
என்சான் வயிற்றை எண்ணி
அலுகோசாகிப்போன மனசு
அலைகடலென இதயக்கூண்டில்
இதயமின்றிக்கிடக்கும் பொழுதுகளை
ஸ்டதஸ்கோப் கொண்டு நோக்கும்



- பிரகாசக்கவி -



அலுகோசு -
மரணதண்டனை நிறைவேற்றுபவன்

Thursday, 23 October 2014

எடக்கு மடக்கு

ஒலியை கண்களால் கேட்டும்
ஒளியை காதுகளால் கண்டும்
மகிழமுயற்சித்ததில் தோற்றுப்போனவர்கள்
மலையடிவாரத்தில் தஞ்சமடைந்தபோது
அங்கே
மலையை முதுகில் சுமந்து
எறும்புகள் இடம்பெயர்ந்துகொண்டிருந்தன


- பிரகாசக்கவி -

22/10/14


Tuesday, 30 September 2014

உளுந்துவடைகளின் உச்சி மாநாடு

ஏற்கனவே திட்டமிட்டபடி

உள்ளூர் சந்தையில் இருந்து

நாற்ற மீன்,
அழுகத் தேங்காய்,
அவிஞ்ச தக்காளி,
கூழ் முட்டை,
பலாக்கொட்டை என்று

வரவழைக்கப்பட்ட பலராலும்
ஆசனங்கள் நிரம்பி வழிந்தன

வட்டா வைத்து
அழைத்து வந்த
வெளியூர் நசல்க்கோழியை

உள்ளூர் உளுந்துவடைகள்
கும்பிடு போட
கூட்டமும் ஆரம்பமாகின

ஒவ்வொரு வடையாய்
உரையாற்ற ஆரம்பித்து
உளுந்துவடை முடிக்கும்போது

நாளை முதல்

பருப்பு வடை விற்பனைக்கு
தடை உத்தரவு வேண்டும் என்றும்

உளுந்து வடையின் பெயர்
ஓட்டை வடை என்றே
அழைக்கப்பட வேண்டும் என்றும்

ஓட்டை வடை மட்டுமே
இந்த நாட்டின்
தேசிய வடை என்றும்

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

இறுதியாய்

ஓட்டை வடை விற்பனைக்கு
தன் செத்தகோழிகள்
உதவி செய்யும் என்று
நசல்க்கோழி வழங்கிய உறுதிமொழியுடன்
கூட்டம் இனிதே நிறைவு பெற்றது !


 - பிரகாசக்கவி -

28/09/2014

Thursday, 25 September 2014

நிலாத்திருடன்

நிலவை காணவில்லையாம்

உலகே ஒன்று கூடி
காவல் நிலையத்தில்
கண்ணீர் சிந்துகிறார்கள்

ஆனாலும் பாவம்தான் அவர்கள்

ஏனெனில்

அதை திருடி
அவன் காதலிக்கு
படையல் வைத்தது

பக்கத்து வீட்டு கவிஞனாயிற்றே ...


- பிரகாசக்கவி  -

கிழட்டு மாடு


அவித்து

கடித்திழுத்து சப்பியபோதும்

மிருதுவாகிட மறுத்ததை

சவ்வு என தூக்கி வீசி

என்னவள்

கிழட்டு மாடென
கினு கினுத்து
தீரும் போது

எனக்குள் தோன்றியதெல்லாம்

அவியாத ஒரு துண்டில்

அழியாமல் இருப்பது

அதன் வீரமும்
மானமும்தான் என்று !


- பிரகாசக்கவி -
24/09/2014

பாசாங்கு


நரம்பறுந்த வீணைகளை வைத்துக்கொண்டு
நாதம் இசைக்கச்சொல்லி அடம்பிடிக்கின்றீர்கள்

எத்தனைமுறை முயற்சித்தாலும்

அந்த முயற்சிகள் எல்லாம்
கடலில் விழுந்த கண்ணீராய்
காணாதுதான் போகுமென்பதை நீங்கள்

ஒருபோதும்
எண்ணிப்பார்க்க
எண்ணுவதே இல்லை

இசைக்கின்ற வீணைகளைவிட
இசைப்பதாய் அசைகின்ற விரல்களின்
இரசிகர்கள் நீங்கள் என்பதால்


- பிரகாசக்கவி -

20/09/2014

தாகம் தீர்த்த குருவிகள்


வற்றிய குளம் ஒன்றின் அருகில் நின்று
எருமைகள் அழுதுகொண்டு நின்றன...

காரணம் அறிந்ததும்
நீராட வந்த யானைகளுக்கு
ஒரே ஆச்சரியம் !

அவைகளின் காதுகளை
அவைகளாலே நம்ப முடியவில்லை

மீண்டும்
தவளைகள் வேறு
தலையாட்டி தொலைத்தன

மீன்களும் அங்கில்லை

சினம் கொண்டந்தயானைகள்

மூர்ச்சையாகி
மல்லாந்துகிடந்த முதலைகளை
மிதித்து கேட்டபோதுதான்
அவைகளுக்கு ஞானம் பிறந்தன

தாகமெடுத்த பல குருவிகள்
சேர்ந்து குடித்தால்
குளமென்ன
கடலும் வற்றிப்போகுமென்று !


- பிரகாசக்கவி -
22/09/2014


பொன்னாடை


காத்திருந்து
காதலர்கள் -மெய்
தழுவிக்கொள்வதில்
கன்னி எனக்கு
முதலிரவுதான்
முழுநாளும் அப்போது ..!


மூச்சுமுட்ட
முப்பது தோள்களில்
முக்காடிட்டு கிடப்பதால்
கற்பழிப்புதான்
கன்னி எனக்கு
தினம் தினம் இப்போது !

பொன் என்ற -என்
பெண்னாடைக்கு
பெறுமதி கிடைப்பதுதான்
எப்போது ?


-பிரகாசக்கவி-


எழுச்சி


இயேசுவின் விதிக்கு இசைவாக்கம் கண்ட
ஒரு கூட்டத்திலிருந்து
எனது விதியை நிறுவுவதற்காக
நியூட்டனின் விதியின் கீழ்
நிமிர்ந்து நிற்கின்றேன்
ஒரு அடியேனும்
திருப்பி அடிக்கமுடியுமென்ற நம்பிக்கையில்



- பிரகாசக்கவி -

21/09/2014

Saturday, 20 September 2014

பறத்தலுக்கான சூத்திரம்



பறவைக்கு !
ஒரு வானம்
ஒரு பூமி
இரண்டு இறக்கைகள்
எமக்கு
ஒரு பூமி
ஆயிரம் கனவு
இலட்சம் வாசல்கள்
நம்பு ...
முயற்சி ...
தவழு,
நட,
ஓடு ...
முன்னேறி
பற, பற, பற .........

- பிரகாசக்கவி -

19/09/2014

Friday, 19 September 2014

வாழ்வும் சாவும்


நேற்றும் இன்றும்
பல பாய்கள் சுற்றப்பட்டன .

இன்றோ நாளையோ
எனது பாயும்
சுற்றப்பட்டே தீரும் .

அன்று
ஆதாமும் ஏவாளும்
விரித்து சுற்றிய பாய்தான் இது !

என்றோ ஒருநாள்

விரித்தவன்
சுருட்டி எறியும்வரை

விரிந்தேதான் கிடக்கப்போகிறது ...

உறங்கவும்
விழிக்கவும்
அவனை துதிக்கவுமென



- பிரகாசக்கவி -

18/09/2014


உங்கள் பயணம் இனிதே முடிந்தது !

எங்கிருந்து வந்தீர்களோ
அங்கே மீண்டு விட்டீர்கள் ...

அரசியலில்

யானையாய்
நீங்கள் இருந்த போதெல்லாம்
பாகனும் நீங்களாகவே இருந்தீர்கள்

ஓடமாக
நீங்கள் இருந்த போதெல்லாம்
எங்களை கரைசேர்க்கும்
துடுப்பாகவும் நீங்களே இருந்தீர்கள்

நீங்கள் ஒருபோதும்
விதை நட்டு
மரம் வளர்க்கவே இல்லை
விதையாய்
நீங்களே இருந்து
மரமாகவும் வளர்ந்தீர்கள்

அதனால்தான்

புல்லுருவிகளும்
நாயுருவிகளும்
நமதுமரத்தை அண்டவே இல்லை

ஏனென்றால்
பீடைகளுக்கு நன்கு தெரியும்
நீங்கள்
களைநாசினிகளுக்கெல்லாம் களைநாசினியென்று

உங்கள் பயணம் இனிதே முடிந்தது

எங்கிருந்து வந்தீர்களோ
அங்கே மீண்டு விட்டீர்கள்

ஆனால் இன்று

உங்கள் பெயர்சொல்லும்
வாலறுந்த பல்லிகள் எல்லோருக்கும்
வாய்க்கட்டு பலமாகவே இருக்கிறது
அத்திவாரங்களை தவிர

அதனால்தானோ என்னவோ தெரியவில்லை

எங்களை
நட்டாற்றில் விட்டுவிட்டு

அவர்கள் எல்லோரும்

இன்னும் இன்னும்
பதவி விழுங்கும் முதலைகளாக
தெப்பக்குளத்தில் நீந்துகின்றார்கள்

நீங்கள் தீர்க்கதரிசி

ஆனால் இவர்களோ
எமக்கு வாய்க்கரிசி

நீங்கள் சொன்னது போல

தலைவர்கள் ஒரு போதும்
மரணிப்பதில்லைதான்

அதற்கு
எங்கள் மனங்களில் வாழும்
நீங்களே சாட்சி

ஆகமொத்தத்தில்

தலைமைத்துவம் இன்றி
தினம் தினம்
செத்துப் பிழைக்கும்
வாடிய பயிர்களுக்கு

என்றுமேயில்லை மீட்சி !

- பிரகாசக்கவி -

16/09/2014


Thursday, 18 September 2014

உணர்வுகளின் உஷ்ணம்


1.
உணர்ச்சிகளின்
உஷ்ணம் என்பது பொல்லாதது
கடைநிலை ஆயுதமாய்
கண்ணீரை சிந்திவிட்டு
வடிகட்டப்படாத
வார்த்தைகளாலும்
வழுக்கிவிழும் வர்ணனைகளாலும்
வாஞ்சை கொண்டு விடுகிறது ...

2.
அன்பது அப்படித்தான்
அர்த்தமின்றி
ஆசை கொள்வதும்
பொருத்தமின்றி
பொறுமை கொள்வதும்
வருத்தப்பட்டு
வாழ்வை கொல்லுவதும்தான்
அதற்கு வாடிக்கை ...

3.
வெறுப்பு என்பது
வேதாந்தங்களுக்கு அப்பாட்பட்டது
அது வேப்பமர பேய்களுக்கும்
முருங்கைமர முனிகளுக்கும் முட்டுப்போட்டது !

- பிரகாசக்கவி -

13/09/2014

கலியாண சந்தை


உளிதீண்டா சிலை ஒன்றை

வரன் தேடிப்போனது ...

கொல்லன் தெருவில் கொஞ்சம்
கள்ளன் தெருவில் கொஞ்சமென சுற்றியது

தன்னை
தங்கம் என்றது

ஈற்றில்

உரசுவாரில்லா அத்தெருவில்

சிலைமட்டும் சிக்கி
சின்னாபின்னமானது


- பிரகாசக்கவி -

15/09/2014

அரக்கொட்டியன்


கும்பிடுதட்டான்கள்
கூடிப்போனதால் ...

வெட்டுக்கிளிகளுக்கும்
வண்ணத்துப் பூச்சிகளுக்கும்
வாழ்வற்றுப் போயிற்று !

தவளைகளை தின்று வாழ
நிர்ப்பந்திக்கப்பட்ட பாம்புகளை போல்
இன்றைய ஓணான்களுக்கும்
பதவியெனும் புகையிலை
போதையாகிப்போனதால் !

ராத்திரியின் ரம்மியத்தை
ரசனையூட்டி
பகலை
பதுங்கு குழியாக்கும் மின்மினிகள்

தீயை
தீனியாக்கி
தீக்குளிக்கும் ஈசல்கள்

கசாப்பு கடைக்காரன் வீட்டில்
கருணையோடு வளர்க்கப்படும்
ஆடுகள் வரிசையில்

நாளைய பொன்வண்டுகளும்
சிலந்திவலையில் சிக்கி
சின்னாபின்னமாகும்

- பிரகாசக்கவி -

09/09/2014

நீர் வற்றிய நிலம்

வறண்ட பூமியின்
உலர்ந்தத மேனியை
துலாவி பார்கின்றேன் ...

வனப்பிழந்த கிழவியை போல்
சருமம் ஒட்டிக்கிடக்கிறது !

பருவமங்கையின்
பளிங்குமேனியாய் பளபளத்த
அதன் பருவகாலங்களை எண்ணிப்பார்கின்றேன் ...

இளமையெனும் ஊஞ்சலாய்
இவள்மேனியில் ஊஞ்சலாடிய நதியும்

அதன் ஜதியும்
என் நெஞ்சான்கூட்டில்
இன்னும் தொக்கி நிற்கிறது ...

இவளை ஜொள்ளுவிட்டு
பல்லிளித்த பலரையும்
இன்றிங்கு காணவில்லை !

அவர்கள் எல்லோருக்கும்
குழாய்க்கிணறு என்னும்
காதலிகள் கைவசம் இருப்பதாய்
இவள் வளர்த்த குருவியொன்று
இரங்கல் சொல்லிப்போகின்றது !

பாவம்
மரம்,செடி,கொடி,புற்பூண்டுகலேன்னும்
இவள் தோழிகள்

சூரிய தீக்குளித்து
எலும்பும் தோலுமாய்
அந்திமக்காலங்களை
எண்ணியபடி கிடக்கின்றார்கள் !

திடீரென்று தாகமெடுக்க
அங்குமிங்கும் அலைகின்றேன்

எதிரே
விறகேற்றிய ஒரு வண்டியைத்தவிர
வேறு ஒன்றுமில்லை அங்கு
என் தாகம் தீர்க்க !


- பிரகாசக்கவி -

10/09/2014

Thursday, 4 September 2014

சுதந்திரம்


ஒரு சொல்
ஏட்டில் எழுதப்பட்டிருந்தது

அந்த சொல்

நானும் நீங்களும்
காதால் கேட்டும்
வாயால் மொழிந்தும்

கண்களாலும் கால்களாலும்
வலைவீசி
தேடிய ஒரு சொல்

காந்திக்கு முன்னும் பின்னுமென
பலரும் சுவாசித்த
ஒருசொல்தான் அந்தச்சொல்

என்றாலும்

இன்றும் நாளையும்
பலருக்கும் எட்டாக்கனியான
ஏற்றமிகு சொல்லும் இதுதான்

இந்த சொல்லின்
மகத்துவம் பற்றியும்

அதன்
தேவை பற்றியும் தெரிந்துகொள்ள

பேராசிரியர்களோ
அல்லது
பெருந்தலைவர்களோ
எனக்கு தேவை இல்லாததால்

ஈழத்தில் இருந்தும்
பலஸ்த்தீனத்தில் இருந்தும்
இரு பிஞ்சுகளை அழைத்து
அந்த சொல்லை
அவர்கள் கரங்களில் திணித்தேன்

அதற்கு பகரமாய் அவர்கள்

யாரால் ?
யாருக்கு ?
எச்சந்தர்ப்பத்தில் ? என்று எழுதிய
வினாக்களை
என்கையில்
தந்துவிட்டுப் போகிறார்கள் 

- பிரகாசக்கவி -

04/09/2014

Sunday, 31 August 2014

விருந்து


எனது வீட்டில் விருந்து அவர்களுக்கு

அவர்கள் இருவரும்
மாளிகைக்கு சொந்தக்காரர்கள்

ஒருவரின் மாளிகை முன்
வெள்ளையென்றும்
மற்றவர் மாளிகை முன்
அலரியென்றும்
அடைமொழி இருக்கிறது !

இவர்களைப்பற்றி
இன்னும் இன்னும் சொல்வதென்றால் ...

இருவருமே
கதிரைகளின் காமுகர்கள்

அதுமட்டுமல்ல

ஏற்கனவே
புஷ், கிளிண்டன், அம்மையாரென்று
பலரும் புணர்ந்துவிட்டுப்போன
கதிரையின்
காவலர்கள்

இரத்தமென்றால் இவர்களுக்கு
கொள்ளைப்பிரியமென்பதால்

AK 47 பொறித்து
கிரனைட் அவித்து
சைனைட் சாம்பாராக்கி
ஆட்லெறியை அமுக்குமுட்டை செய்து

பீரங்கி பீட்சா
புல்லட் புளியாணம்
ஏவுகணை எல்லுருண்டை
குண்டு குர்மா
சினைப்பர் சிப்ஸ் என்று
எல்லாம் விதவிதமாய்
சுடச்சுட இருக்கிறது !

இன்னும் என்ன
அவர்கள் வரும்வரை
ஊரெல்லாம் ஒப்பாரி வைத்து
காகங்கள் கரைந்து சாகட்டும்

- பிரகாசக்கவி -

31/08/2014

Sunday, 24 August 2014

கதையல்ல கற்பனை

புல்வெளியில்
பூப் பூத்து
பூ மரங்கள்
காய் காய்த்து
பாறைகள் பனித்துளியாகும்
ஓர் நாளில் !

இறைவன் நாடினால் ...

எருமை ஜனாதிபதியாகி
கழுதையை பிரதமராக்கும்
பன்னிக்குட்டி சபாநாயகர் ஆகும்

எலி, பூனை
பல்லி, பாம்புகள் அமைச்சர்களாக
பூச்சி, புழு, பூரான்கள் பிரதியமைச்சு ஏற்கும்

சிங்கம், புலி, சிறுத்தை
யானை, மான், கரடியென்று
ஒட்டுமொத்த ஜீவராசிகளும்
நாட்டுக்குள் படையெடுக்கும்

எந்திரங்கள் குட்டி போட்டு
காடுகளை ஆக்கிரமிக்கும்

அலுமினியம், ஈயம், பித்தளை
செம்பு, இரும்புயென்று
இன்னும் பிற உலோகங்களின் பயிர்ச்செய்கை
காட்டில் நடக்கும்

கடல்
குட்டையாகி
குடிநீர்
கோடிரூபா விலை போகும்

கோழிகளுக்காக
கீரிப்பிள்ளை குரல் கொடுக்கும்

வைரஸ்
வட்டிக்கடை நடாத்தும்

எயிட்சை
எபோலா குத்திக்கொன்று
விருது வாங்கும்

மாட்டு சந்தையில்
மனிதன் விலையாவான்

ஆடுகள்
கசாப்புக்கடை நடாத்தும்

முட்டைக்குள் உலகம் சுருங்கிப்போக
காற்று கண்ணயர்ந்து தூங்கும் !!!

- பிரகாசக்கவி -

24/08/14


Thursday, 21 August 2014

இனிப்பாய்போன கடல்



அவள் எச்சில் செய்துபோன
ஒருகோப்பை தேநீரில்

ஈ ஒன்று
முங்கிக் குடித்ததில்

சிந்திச்சிதறிய
சின்னத் துளிகள்

கரையைத் தாண்டி
கடலில் கலந்தன ...

என்னவோர் ஆச்சரியம் !

கடலெங்கும் இனிப்பகி
எறும்புகள் மொய்க்கின்றன ஒரு புறம் !!

அங்கே

சீனி வந்த மீன்களெல்லாம்
வைத்தியம் தேடி
அலைகின்றன மறுபுறம் !!! 

- பிரகாசக்கவி -

16/08/2014

Thursday, 14 August 2014

தரிசாகிப்போன காடொன்றின் கதை


அவனொரு பந்தை செய்தான்
அதுதன்னை அண்டம் என்றது

அவ்வழியோருவன் ஓடி வந்தான்

எட்டி உதைத்தான்
எம்பிக்குதித்தான்

மீண்டுமதுதன்னை வனாந்தரம் என்றது

அங்கே
பறவைகளும் விலங்குகளும் ஒன்றுகூடி
உதவி வேண்டுமென்றன...

போனால் போகட்டுமென்று
மௌனமாய் அதுவும் தலையசைத்து
செப்புங்கள் என்றது !

முதலில் விலங்குகள் வந்தன

ஓடியொழிய
உலாவித்திரிய

உண்டு மகிழ்ந்து
கூடிவாழ உன்

திருமேனி வேண்டுமென
அன்பாய் கேட்டன

ஆசையாய் யதுவும்
ஆமாமென்றது

மீண்டும் பறவைகள் வந்தன

பசியாற்ற பழமும்
தும்பு ,குச்சி, ஈர்க்குகளோடு
கூடு கட்டி குடும்பம் நடாத்த

உன் தலையில்
இடமும் வேண்டுமென

பரிவாய் இவைகளும் கேட்டன

பாசமாயிதுவும் தலையாட்டி
ம்ம்ம் ம்ம்ம் என்றது !

மனிதன் வந்தான்
எனக்கும் என்றான் ...

அண்ணார்ந்து அது
அவன்முகம் பார்ப்பதற்குள்

விறகு
வீடு
வீதியென்று
பின்
விபத்தென்றான்

- பிரகாசக்கவி -

13/08/2014

கடத்தல் ஒன்றின் நிழற்படம்


இதில் வெள்ளைவேன் இராது.

முகமூடி
துப்பாக்கி

பாழடைந்த பங்களா
பத்திரிக்கை செய்தி

வெட்டுக்குத்து
அழுகிய சடலம்

சுற்றிவளைப்பு
என்கவுண்டர்

இப்படி ஒன்றும் இராது

நீங்கள் இதை கொஞ்சம்
தலைகீழாய் பிடித்தால்

அங்கே

இடம்மாறிய இதயம்
நாட்டியமாடிய விழிகள்
ஊமையாய் போன மொழி
உஷ்ணமான உடல்களோடு

கொடும்வெய்யிலிலும்
கொட்டித்தீர்க்கும்
அடைமழையென

இன்னும் பலவும் இருக்கும்

- பிரகாசக்கவி -

11/08/2014


Wednesday, 6 August 2014

சதி விதைக்கும் சாத்தான்கள்


துரும்பு ஒன்றை திணித்து விட்டு

இரும்பை எல்லாம்
பலவந்தமாய்

தூக்கிச் சென்றார்கள் ...

துரும்பை நான்
கரும்பாக்கி கண்ணயர்ந்தேன்

எறும்பை மேயவிட்டு

தேன்கரும்பை
களவாடிப் போனார்கள் ...

எறும்பை நான்
எருமையாக்கி நிக்கையிலே

காதில் வந்து
கனிவாய் சொல்கிறார்கள்

மாடு உனக்கு
பால் எனக்கு என்று !!!

- பிரகாசக்கவி -

06/08/2014

Monday, 4 August 2014

முகமாற்று சிகிச்சை


என்னை

இரவும் 


இரவை

நானும் 


மாறி மாறி

திண்டு தீர்த்தத்தில்


பண் பாயின் ஓரம்


மிச்சமாய்


நான் மட்டுமே ஒட்டியிருந்தேன் !


அவர்கள்

பகலையும் 


பகல்

அவர்களையும் 

கரைத்துக்குடித்ததில் 


கடைசியில்


கசாய குப்பிபோல

அவர்கள் மட்டுமே


எஞ்சிப்போனார்கள் !!


ஆனால்

தினம் தினம்


அஞ்சாத

இரவும் பகலும்


முகம் மாற்றி மாற்றி

முத்தமிட்டுக்கொண்டன ...



- பிரகாசக்கவி -

03/08/2014

12.02pm

Thursday, 31 July 2014

சிறகு தேடும் மீன்குஞ்சுகள்


பாசிபடர்ந்த

பாறைகளுக்குள்.


எங்கள்

கண்ணாமூச்சிக்கு
கல்லெறிந்து

கண்ணாடி பெட்டிகளுக்குள் காட்சிப்படும்
எம் நிர்வாணம் ஒருபுறம்

நீந்துதலுக்கும்
இரை கொத்தி
மாளுதலுக்கும் இடையில்
கடந்து போகும் சுவாசம்
மறுபுறம் என்று

எங்களின் உலகம்
நீருக்குள்
நிர்ணயமானபின்னும்

வருந்துவதே இல்லை நாங்கள்

என்றோ ஒரு நாள்
மூச்சடக்கவும்

முன்னேறி

மீன்கொத்திகளை
மூழ்கடிக்கவும் முடியும் என்ற
நம்பிக்கையில்.

 

பிரகாசக்கவி
30/07/2014

Monday, 21 July 2014

குறிப்பு வரைதல்






இப்பொழுதெல்லாம்

மனிதன் என்னும் பெயருக்கு

சிறு குறிப்பொன்றை வரைந்தால் ...

 

அது .

 

எலும்புகளை மூட

தசையையும் 

 

தசையை மூட

ஆடைகளையும் போர்த்திக்கொள்ளும் 

 

விசஜந்து என்றே பொருள்ப்படும் !!!

 


பிரகாசக்கவி

20.07.14

இலவசம்



ஓ

உலக மகா

கசாப்புக்கடைக்காரர்களே...

உங்கள் கடைகள்
திறந்ததே இருக்கட்டும்

கொஞ்சம் என்னோடு வாருங்கள்

அங்கே தாளிட்டிருக்கும்
கொட்டாய்களையும்
தொழுவங்களையும்
கொஞ்சம் தகர்த்தெறிவோம்

அந்த
ஜீவன்கலேனும் கொஞ்சம்
நிம்மதியாய் சுவாசிக்கட்டும்

வெட்டி
வகுந்து
துண்டு போட
மாமிசமின்றிப் போகும் என்னும்
கவலை உங்களுக்கு
கடுகளவேனும்
வேண்டவே வேண்டாம்

ஏகாதிபத்திய வல்லரசுகளின்
வாசலுக்கு செல்லுங்கள்

அங்கே
பலஸ்தீன் பக்தாத் என்று நீளும்
அடக்குமுறைப் பரம்பலில்

இன்னும்
மூலை முடுக்குகள் எங்கும்

குண்டு போட்டு
கூறு போட்டு
குவித்திருக்கும் என்
உடன்பிறப்புகளின்
மாமிசம் மட்டும் அங்கே இலவசம்

 


பிரகாசக்கவி

20/07/2014

11.30pm

Friday, 18 July 2014

மகுடி ஊதும் மஞ்சக்கழுதைகள்


பாம்பாட்டும் படலம்

சந்துபொந்தெல்லாம் கிறுக்கப்படுகிறது

புனைவுகளுக்கு
புள்ளி வைத்து
கோலம் போடவேண்டும் என்பதற்காக

மண்புழுக்களுக்கு
அனஹொண்டா என்றும்.

பட்டாம்பூச்சிகளுக்கு
பருந்து என்றும்.

புள்ளிமான்களுக்கு
புல்டோசர் என்றும்

இன்னும்

கொரில்லாக்கள் மட்டும்
இன்நாட்டின்
சிறந்த குடிமக்கள் என்றும்

கதாபாத்திரங்களுக்கு

கண்
மூக்கு
வாய் வைத்து
வாலும் வரையப்படுகின்றது!

கடுப்பெடுத்து
குறிவிறைத்த
மஞ்சக்கழுதைகள் மட்டும்.

பின்

பசியெடுத்து
மகுடி ஊதி அலைகின்றன
அங்கும் இங்கும்

மண்புழு தேடித்தேடி ...

 


- பிரகாசக்கவி -

17.07.2014

Saturday, 12 July 2014

திருட்டு சுகமும் அழுக்கு விந்தும்


முட்டைக் கோதுடைத்து

மூச்சுவிடும்

கோழிக் குஞ்சுகளாட்டம்

விதை கிழித்து

வேர் துளைத்து

தலையசைக்கின்றது

கழிவென்றெண்ணி

கைவீசிய

அழுகத்தக்காளி ஒன்று

தெருவோர

குப்பைமேட்டில்

தோட்டத்துச்

செடிகளைப்போலவே

இவைகளும்

பூத்தல்

காய்த்தலெனும்

கற்பு வரம்

கைவரப்பெற்றிருக்கின்றன

குப்பைவண்டி என்னும்

கழுகுகள்

கண் காணாதவரை

நோக்கும் கண்களின்

நோக்கங்களுக்கேற்றார்ப்போல்

தம் வாழ்வின் அபத்தங்களை

பறைசாற்றியபடி


பிரகாசக்கவி

12/06/2014