அவளை அவர்கள்
வாழும்போதே வதைத்தார்கள்
வாழ பழகிக்கொண்டாள்
இன்னும்
அவள் இறப்பின் சேதியை
அவளையே வாசிக்க செய்தார்கள்
அப்போது அவள் சிரித்திருக்கவேண்டும்
முல்லாக்கள்
அவள் பேச்சில் கண்டதெல்லாம்
முற்றும்பிழை
அதனால் அவளை தைத்ததெல்லாம்
முற்களாயிற்று
இவளும் ஒரு
இஸ்லாமிய பெண்தான்
ஆனால் இவள் ஒரு நாளும்
புர்காவுக்குள் மட்டும்
பூப்பறிக்க ஆசைப்பட்டவள் அல்ல
அவள்
துப்பட்டாவில்
பூந்தோட்டம் வளர்க்க நினைக்கிறாள்
கூடவே புள்ளிமான்களையும்
வளர்க்கிறாள்
சிந்தனைக்கு சிறகு சமைக்கிறாள்
அவள் தேசத்தில் நுழையும்
வேடுவனின் விஷம்பறிக்க
வீச்சருவாக்களையும் வீசுகிறாள்
பாரதியின் பாசையில்
சொல்வதென்றால்
இவள் ஒரு புதுமைப்பெண்
இவளுக்கும்
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
கூடவே இறையச்சமும் இருக்கிறது
ஆனால்
அவர்கள் அவளை
எப்படி எப்படியோ சொல்வார்கள்
இத்தனைக்கும்
அவர்கள் கூட்டல் கழித்தலில்
இன்னும் இன்னும்
அவளும் அவள்போன்றவளும்
கூட்டிப்பெருக்கி
பொங்கிப்போடும்
எந்திரங்களன்றி வேறில்லை

No comments:
Post a Comment