பிரகாசக்கவி -
கவிஞன் இல்லாத உலகம் எப்படி இருக்கும் ?
ரியாஸ் குரானா -
முதியவர்கள் மட்டும் வசிக்கும் ஒரு கூடாரம்போல் இருக்கும். அல்லது நோயாளிகள் மட்டுமே நிறைந்த ஒரு வைத்தியசாலை போல இருக்கும். இப்படிச் சொல்வேனென்று எதிர்பார்த்திருக்கலாம். நான் அப்படிச் சொல்லப்போவதில்லை. கவிஞனில்லாத உலகம் சொர்க்கம். கவிதையில்லாத உலகம் நரகம்.
பிரகாசக்கவி -
பொன்னாடைகளுக்கு வாயிருந்தால் ?
ரியாஸ் குரானா -
துா... எனக் காறித்துப்பும். பன்னாடைகள் மாத்திரமே பொன்னாடைகளை கொண்டாடுவர்.
பிரகாசக்கவி -
ஒரு கவிதை எதை செய்யவேண்டும் அல்லது எதை
செய்யக் கூடாது ?
ரியாஸ் குரானா -
கவிதை எதையும் செய்யக் கூடாது. எதையும் செய்யச் சொல்லவும் கூடாது. சும்மா இருக்க வேண்டும். சும்மா இருப்பதே கடினமானது. எனக்கு பிடித்ததும் கூட. கவிதை வேலைக்காரர் அல்ல. அதுபோல இதைச் செய் என கட்டளையிடும் எஜமானரும் அல்ல.
பிரகாசக்கவி -
விருதுகள் ஒரு பிரதியை எடை போடுவதற்கான நல்ல
தராசா ?
ரியாஸ் குரானா -
விருதுகள் பிரதியை என்ன ”பிரிதியை”க் கூட எடைபோட உதவாது. மாட்டுக்கு மூக்கணம் குத்துவைப்போலதான் விருதும். அது கௌரவமா? இல்லை விலங்கா? வாங்குபவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். எனக்கு விருது கிடைப்பதாக இருந்தால் நான் அதனுடன் எவ்வளவு பணம் தருகிறார்கள் என்று மட்டுமே பார்ப்பேன்.
பிரகாசக்கவி -
பாரதிக்கு முன் நீங்கள் பிறந்திருந்தால் பெண் விடுதலை பற்றிய உங்கள் பிரதியை எப்படி எழுதியிருப்பீர்கள் ?
ரியாஸ் குரானா -
பெண் விடுதலை பற்றி நான் எழுதியிருக்க மாட்டேன். அதுவும் பெண்களுக்காக ஒரு ஆண் கவிதை எழுதுவதைப் போன்றதுதான். எனவே, பெண்களை அவர்களுக்காக எழுதும்படி சொல்லியிருப்பேன். நான் பாரதிக்கு முன் பிறந்திருந்தால், எனக்குப் பின் பாரதி என்ற ஒருவர் வந்திருக்கவே மாட்டார்.
பிரகாசக்கவி -
A.R ரஹ்மானின் இசையில் ஒரு திரைப்படத்தில் 5 பாடல்களும்
எழுதும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால் ?
ரியாஸ் குரானா -
உண்மையில் இந்தக் கேள்வி ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விதான். றியாஸ் குரானாவின் கவிதைகளுக்கு இசையமைக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால்? இப்படிக் கேட்க வேண்டும். என்றாலும் பரவாயில்லை பதில் சொல்கிறேன். நவீன கவிதையை இசைக்குள் கொண்டுவர இன்றுவரை எந்த இசையமைப்பாளராலும் முடியவில்லை. வெறுமனே சந்தக் கவிதைகளுக்குத்தான் அவர்கள் இசையமைத்துக்கொண்டிருக்கிறா
பிரகாசக்கவி -
கவிதையின் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு ஒரு பெயர் வையுங்கள் என்று உங்களிடம் கேட்டால் ?
ரியாஸ் குரானா -
மரக்கறி-இப்படி வைக்கலாம். பிடுங்கும்போது புதுசா இருக்கும். நாள்பட்டபல் பழுதடைந்துவிடும். ஆனால், எனக்கு புளியாணம் கடுமையாக பிடிக்கும். அதனால், மொழிப் புளியாணம் என்று வைக்கவே அதிகம் விரும்புவேன். அப்பதான் சு்டவைத்து சுடவைத்து குடிக்கலாம்.
கவிதையின் பரிணாம வளர்ச்சிக்கு பெயர்வைக்கத் தேவையில்லை. உண்மையில் கவிதையை புரிந்துகொள்ள முயற்சித்தாலே போதும். புரிந்து கொள்ளுதல் என்பது கவிதை பற்றி வாசித்தலில் நிகழுவதுதான். ”கவிதைக்கான மாற்று” என்று சுமார் 7 வருடங்களுக்கு முன் எழுதியிருக்கிறேன். அதுவே நல்ல பெயர் என்றுதான் நினைக்கிறேன்.
பிரகாசக்கவி -
கவிஞன் நல்லவனா கெட்டவனா ?
ரியாஸ் குரானா -
கவிஞன் என்று சொல்லுவதில் எனக்கு உண்மையில் உடன்பாடு இல்லை. அது ஆணை மட்டுமே சுட்டுகிறது. அதை முடிந்தளவு மறப்போம். இப்படி தமிழில் எத்தனையோ சொற்களுக்கு பெண்பாற் சொற்கள் இல்லை. கவிஞர்களும் மனிதர்கள்தான். ஆகவே, நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஏதோ குறைபாடு இருக்கிறது என்றுதான் நான் சொல்வேன்.
பிரகாசக்கவி -
உங்களை ஒரு அறையில் அடைத்து வைத்து கவிதைகளை மட்டும் மூவேளை உணவாக உங்களுக்கு
பரிமாறினால் உங்கள் எதிர்வினை எப்படி இருக்கும் ?
ரியாஸ் குரானா -
ஒரு வேளை உணவாக கவிதை கிடைத்தாலும் வாந்தி வந்துவிடும். வயிற்றைக் குமட்டும். கவிதை வெத்திலபாக்குப் போன்றது, மெல்ல வேண்டும் பின் துப்பிவிட வேண்டும். ஆனால், நாக்கும் உதடும் சிவக்க வேண்டும். லேசா கிறுகிறுப்பும் வேண்டும். அவ்வளவோடு நிறுத்திவிடத்தான் விருப்பம். தண்ணி அடிக்கும்போது பக்கத்தில் பைற்றாக பாவிக்க மட்டுமெ கவிதை உதவும். மூவேளை உணவா.. மாடுகூட சம்மதிக்குமா என்று தெரியவில்லை.
பிரகாசக்கவி -
கவிதைப் பட்டறைகள் அல்லது பயிற்சி வகுப்புக்கள் மூலம் ஒரு கவிஞன் உருவாக்கப்பட்டால் அவனில் இருந்து வெளிவரும்
பிரதிகள் எந்திர மனிதனைப் போன்று இருக்கும் என்று நான்
சொன்னால் அதனை ஏற்றுக்கொள்வீர்களா ?
ரியாஸ் குரானா -
கேட்டுக்கொள்வேன். ஏற்றுக்கொள்ளமாட்டேன். இப்படிச் சொல்லும் உரிமையை நான் மறுப்பதில்லை. ஆனால், அதை ஏற்கத்தான் வேண்டுமென்றுமில்லை. அதற்கு என்னிடம் நிறைய காரணங்கள் உண்டு. கவிஞன் வானத்திலிருந்து விழுவதில்லை. அதுபோல கவிதையும் யாரோ ஒரு சிலருக்கு வானத்திலிருந்து பிரத்தியேகமாக “வஹி” மூலம் வந்து கிடைப்பதுமில்லை. உருவாகுவதுதான் கவிஞன். உதிப்பது அல்ல. மனிதனின் ஏதோ ஒரு பருவத்தில்தான் கவிதையை அவன் எழுதுகிறான். பிறந்தவுடன் கவிதையை யாரும் எழுதுவதில்லை.
ஆனால், இதுவரை கவிஞன் என்றால் ஏதோ ஒரு விசித்திரமான பிராணிபோல, மற்ற மனிதர்களில் இருந்து ஏதோ சிறப்பு மிக்க ஒருவர்போல நம்பவைக்கபட்டு வந்திருக்கிறது. அனைத்து மனிதர்களும் கவிதையை ஏதோ ஒரு வகையில் உணரும் மனதைக்கொண்டிருப்பவர்கள்தான
இங்கு இன்று எழுதுகிறவர்கள் அனைவரும், இதற்கு முன் மொழிவெளியில் கவிதை என சொல்லப்பட்டவைளை படித்து அதன்பின்தான் கவிதைகளை எழுதுகிறார்கள். கவிதை என்று சொல்லப்படுகின்ற எதையும் படிக்காது - நான் கவிதை எழுதுகிறேன் என்று யாரும் சொல்ல முடியாது. ஆக, அவர்கள் மறுத்தாலும் படிக்கப் படிக்க ஏற்படும் பழக்கம்தான் அது. அந்தப் பழக்கத்தை அழகாக பயிற்ச்சி என நான் சொல்கிறேன். அவ்வளவுதான்.
மொழி என்பதே மனிதனின் தயாரிப்புத்தான். ஆகவே, தயாரிக்கப்பட்ட ஒன்றைவைத்துக்கொண்டு அதில் ஏதோ உதிப்பதாகச் சொல்வது நகைச் சுவையானது. மொழியில்தான் சிந்திக்கிறோம். என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். சரி, கவிதைப் பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பிருந்தால், இவை குறித்து இன்னும் விரிவாகப் பேசலாம். கவிதை உருவாக்கத்தில் எவ்வளவு பயிற்சியும், மொழியைக் கையாள்வதில் எவ்வளவு ஆற்றலும் இருக்கிறதோ அந்தளவு கவிதை பிக்சனாக (புனைவாக) மாறும்.
இன்னும் ஒரு விசயம் மனதில் எந்த விசயமும் ஒரு ஒழுங்கில் சிந்திக்கப்பட்டு வருவதில்லை. அது குளம்பித்தான் தோன்றும். அவைகளை மொழியில் ஒழுங்குபடுத்தும் போதுதான் கவிதையாக மாறும். தோன்றுகிறது என்று சொல்கிறவர்கள் தோன்றும் அனைத்தையும் அப்படியே மொழியில் எழுதிவைக்கிறார்களா என்ன? ஒரு சிறு திருத்தமும் செய்வதே இல்லையா? உங்களுக்கு தெரியுமா? தியானம் கூட பயிற்சிதான். கவிதை எம்மாத்திரம். சரி...
உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் கவிஞராக ஆவதற்குரிய அனைத்து தகுதிகளுடனுமே பிறந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் உணரும் , சிந்திக்கும் விசயங்களை மொழியில் பதிவுசெய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவைகளைப் பதிவு செய்வதற்காக தடங்காட்டுவது அவசியமானது. அதையே செய்யப்போகிறோம்.
என்னால்தான் கவிதை எழுதமுடியும் மற்றவர்களால் முடியாது என பெருமையடிக்கும் கவிஞர்களுக்கு இது சற்று சிக்கலானதாக இருக்கலாம். யாரும் கவிதை எழுதலாம் அது ஒரு சீன வித்தையல்ல. அல்லது அது ஒரு வித்தை. அவ்வளவுதான்.










