ஒருபுறம்
நகரத்தின் நரகம் கரைந்துருக
உடலெங்கும் கசிகிறது
வியர்வைத்துளிகள்
மறுபுறம்
உயிர்க்கொல்லியை
தசையில் போர்த்தி
தெருக்களெங்கும் தவித்தலையும்
காமப் பேய்கள்
பெரிய கையான்பட்டு
மக்கோசாகிப் போன
சிறு குண்டுகலாட்டம் சிந்திச் சிதறி
அலைமோதும் மானிடகூட்டம்
பக்கத்துத் தெருவை
பத்துத்தெரு சுற்றி
பணம் பிடுங்கும்
ஆட்டோ முதலைகள்
பழங்களோடு பழங்களாக
பழுதுப்பழங்களை கூட்டுச்சேர்த்து
பணம் பார்க்கும் பழக்கடைகள்
ஊனம் காட்டி
உயிர் வளர்க்கும் உதவாக்கரைகள்
வீதிகளை பலாத்காரம் செய்யும்
பெரியதும் சிறியதுமான
எந்திரக் காளான்கள்
இன்னும் இன்னும் இதுபோல் நீளும்
இத்தியாதிகளின் நடுவே
ஒரு மயானத்தின்
மௌன அமைதியை தேடுகிறேன்
அதை உணர்தல்
சந்திரனில் சாத்தியமாம்
புறக்கோட்டையில்
அதை மருந்துக்கேனும் நுகர்தல்
மலையில் மாடேற்றும் கணக்காம்

No comments:
Post a Comment