Friday, 21 February 2014

துடுப்பில்லா படகுகள்


சேவல்களின் குரல்வளைகள் நெரிக்கப்படுவதால்
இப்போதெல்லாம்
நாய்கள் குரைத்துத்தான்
பொழுது விடிகிறது
என் தேசத்தில் !

பசுக்களெல்லாம் பரிகசிக்கப்படுவதால்
பேய்களின் தொழுவமாய்
மாறிக்கிடக்கிறது நாடாளமண்றம் .

பாம்புகளுக்கு பால்வார்ப்பதர்க்காய்
வந்து போகிறது தேர்தல்கள் .

இருந்தும் என்ன பயன்

சிறு பான்மையெனும்
வாயில்லா பூச்சிகளின் வாழ்வில்
இன்னும் இன்னும் .

பல்லிகளும்
தவளைகளும்தான் வந்து வந்துபோகிறார்கள்
தலைவனாகவும்
தொண்டன்களாகவும்!



- பிரகாசக்கவி -


Saturday, 15 February 2014

ஆடு மேய்க்கும் ஓநாய்கள்



ஆடுகள் ஒருபோதும்
குரைப்பதில்லை நாய்களைப் போல ...

அதனால்தான்
இன்றும் சில ஓநாய்களால்
ஊளையிட்டுக்கொண்டே இருக்கமுடிகிறது
வல்லரசு எனும் வல்லூருகளாய் !

புத்தனையும் காந்தியையும்
நக்கி பார்க்காவிட்டால்
அவைகளுக்கு தூக்கம் வருவதேயில்லை .

இடையர்களை எல்லாம் புடையன்கள் போல
கொத்தி கொத்தி கொல்லுவதில் தான்
இவைகளுக்கு பேரானந்தம் .

ஏன் என்றால்

அப்போதுதானே
ஆடுகளை தின்று
எண்ணெய் காடுகளையெல்லாம் ஆளலாம் .

ஆனால் ஒன்றுமட்டும் இதுவரை
ஓநாய்களுக்கு புரியவேயில்லை

புலிகள் பதுங்குவது
ஓய்வெடுக்கவல்ல
பாய்வதற்கு என்று !

- பிரகாசக்கவி -


Thursday, 13 February 2014

தலைக்கனம்



தட தடத்து
கட கடக்கும் 

ஒரு ரயிலின்  
ஒவ்வாத
 ஓசை நயமாய் நம்முள் !


முட்டி மோத
முதுகெலும்பில்லா
முறுக்கு மீசையின்
வரட்டு கௌரவம் இது !


யானை போல்
நம்மை
எண்ணத் தூண்டும் !


சிறு
குரங்கு போல்
தாவிப் பார்க்கும் !


தான்
தெரு நாய் என்பதை
ஏற்க மறுக்கும் !


பெரும்
ஓநாய் என்று
ஓலம் போடும் !


மமதை
கொள்ளும் !


அகந்தை
ஏற்றும் !


தென்றலென
புயலைச் சொல்லும் !


பஞ்சாகி
நீ பறப்பாய் !


பாவம் என்று 
உனைச்சொல்லி
அது சிரிக்கும் !


- பிரகாசக்கவி-


Tuesday, 11 February 2014

தனிமை



பொறுமையெனும் எரிமலையின்

கொடுமையெனும் செந்தணல்கள்

 

தனிமையெனும்

தாக்கத்தி பிடித்து என்

வெறுமையெனும்

மெய்க்கதிர் அறுகிறது !

 

முடமாகிப்போன

மூச்சுக்காற்றோடு

ஜடமாகிக்கிடக்கிறேன்

ஜன்னல்வழி நிலாகீற்றோடு ...

பாம்பு புற்றில்

பலியாகிப்போன

சுண்டெலியாய் நான்

 

இருள் அப்பிய இரவுகளில்

தினம் தினம்

ரணம் உப்பிய பிணமாய் !


- பிரகாசக்கவி -


Monday, 3 February 2014

முதுமை



வாடகை வாழ்வின்
கார் காலத்தில்

விறு விறுவென
விற்று தீர்கிறது வாலிபம் !

கூவிக் கூவி விற்றாலும்
விலை போகா பண்டங்கள்

எலும்பும் தோலுமாய் !

காய்ந்துபோன
சில புன்னகை பூக்களோடு

ஒற்றை பீங்கான்
ஒடிந்த குவளை

ஒரு நாற்காலி
நலிந்து போன மெத்தையென
நான்கு கண்களுக்கு மறைவாக

நாள்பட்ட சளியும்
நரை விழுந்த தலையுமாய் !

பிள்ளை வீட்டு தாழ்வாரத்தில் .



-பிரகாசக்கவி -