Friday, 31 January 2014

தேர்தல் தெரு விழா


எங்கள் ஊரு சந்துபொந்தெல்லாம்

பச்சை என்றும்
பச்சை மஞ்சள் என்றும்
சிவப்பு நீலம் என்றும்
வண்ண வண்ணமாய்...

திருவிழா காலத்து
முட்டாசு கடைகள் போல
அழகு அழகாய் ...

என் வீட்டு முச்சந்தியது

நேற்று
ஒருவன் வந்து
குரங்கு வித்தை காட்டிப் போனான்

நாலைந்து பெருசுகளும்
ஏழெட்டு சிறுசுகளும்
கைகொட்டி போனார்கள்

அதே இடத்தில் இன்று ஒருவன்
செத்த பாம்புகளை ஆட்டுவிக்கிறான்
சில பாம்புகளை
மூக்கில் விட்டு
வாயில் எடுக்கிறான் .

விசில் சத்தம் வானை பிளக்கிறது .

தூரத்தே ஓர் அசரீரி
நாளையும் இத்தெருவில் யாரோ ஒருவன்
யானையை பூனையாய் மாற்றப் போவதாய் !



- பிரகாசக்கவி-


Wednesday, 29 January 2014

எப்போது ?




காலைப் பொழுது புலர்ந்து
பனி மூட்டங்கள்
சின்ன சின்ன முக்காடு போட்டு

அன்னார்ந்து பார்க்கும்
அகன்ற மலைகளையும்
வானோடு மேகம் சேர்த்துவிட

சூரியனைக் காண
நாணத்தோடு காத்திருக்கும்
பூமி நங்கை போல

காளையர்கள் கேட்கும்
சீதன சில்லரைகளால்
சிதறு தேங்காயாய் சிதறுண்டு
காலம் கடத்தும்
கன்னியரின் வாழ்வு புலரும்
காலம்தான் எப்போது ?


- பிரகாசக்கவி -

Sunday, 26 January 2014

மதம் தின்னிகளுக்கு ஓர் மனு



மதமெனும்
மலம் தின்னிகளே ...

நீங்கள்
சொல் எறிந்து
பாம்பாட்ட,
கல் எறிந்து
பேய் ஓட்ட,
போதிமரத்து
போதனைகளின்
போதை குறைந்து போனதுவோ ?

ஆங்காங்கே
மதுக்கடை போல்
உங்கள்
சாக்கடைகள் மலிந்து போயிற்றே !

ஒருவேளை
இது !
காவி அணிந்து
ஆவி துறந்த
பாவிகளின் சுடுகாடு என்பதனால்
இந்த தடு மாற்றமோ ?

முஸ்லிம்கள்
சாந்தி மார்க்கத்தின்
சந்தன வயலில் மொட்டவிழ்ந்த
சமாதான பூக்கள் என்பதனை
எங்கள் தலைவர்கள் யாரும்
உங்களுக்கு சொல்லித்தரவில்லையா ?

அதற்காக எங்களை மன்னித்துவிடுங்கள்

நாங்கள்
கருணைக்கு
கடல் போன்றோர் என்பதனை
தயவு செய்து
உங்கள் பிள்ளைகளுக்கேனும்
சொல்லிக்கொடுங்கள் .

தொப்பிகளும் சிலுவைகளும்
பொட்டுகளின் கைகோர்த்து
காவிகளின் தோள் சாய்ந்து
பௌர்ணமி நிலா ரசிக்கட்டும் !

அந்த நட்பெனும் நந்தவனத்தில்
நாளையேனும் புது நாடு
பூப் பூக்கட்டும் !

- பிரகாசக்கவி -

Saturday, 25 January 2014

மாடிவீட்டு மயான வீதிகள்



காகங்களுக்கு மட்டுமல்ல
பூனைகளுக்கும்தான்
தடைசெய்யப்பட்ட பிரதேசம் அது .

எலிகலெல்லாம்
நாடுகடத்தப்படுவதால்

பல்லிகளுக்கும்
கரப்பான் பூச்சிகளுக்கும்
மரண தண்டனை
பிரகடனப் படுத்தப்பட்டாயிற்று .

இருந்தும் .

யாசக கோழிகள் இரைதேடி
தினம் தினம்
மாடிவீட்டு
மயான வீதிகளில்தான்
நாய் போல ...

- பிரகாசக்கவி -

Thursday, 23 January 2014

மயான மடல்



ஏய் துப்பாக்கிகளே
போதும் நிறுத்துங்கள்!
நீங்கள்
தினம் தினம்
சல்லடை செய்து போடும்
எச்சங்களை எல்லாம்
விழுங்கி விழுங்கி
என் வயிறு வெடித்துப் போயிற்று ...

யாருக்கு செய்த பாவமோ
மயான பூமியாய்
இப் புவிதனிலே
ஜனனித்துக் கிடக்கிறேன்

விதியை நொந்து
என்ன பயன்
கிழிந்து கிடக்கும் என் வயிற்றுக்கு
தையல் போட்டு
மருந்து கட்டி
மனித எச்சங்கலெல்லாம்
மக்கி போனவுடன்
தூது அனுப்புகிறேன்

அதுவரை உங்கள்
துப்பாக்கி முனையை
குத்தகைக்கு விடுங்கள்
குருவிகள் கூடு கட்டி
குடும்பம் நடத்தட்டும் !

உங்கள்
துப்பாக்கி ரவைகளை
தர்மம் செய்யுங்கள்
ஒவ்வொரு வீடுகள் தோறும்
மலர்ச் செடிகள் நட்டு
மனம் மகிழட்டும் ...!



- பிரகாசக்கவி


Tuesday, 21 January 2014

தடம் தொலைத்த தடயங்கள்



தலைப்புகளுக்கு
கருவான சமாச்சாரம்
விளம்பரங்களுக்குள்
விந்துத் துளி போல
வியப்பாய் !

வெட்டி
குத்தி
சுட்டு
அப்படி இப்படி
ஒட்டியும் ஒட்டாமலும் ...!

காக்கை எச்சங்களை விஞ்சிய
மிச்ச சொச்சங்கள்
குருடன் கண்ட
யானை போல...
குஞ்சுக் கோழி போட்ட
முட்டை போல
மலையாய்
முடிவிலியாய் ..........

வெட்டி
குத்தி
சுட்டு
அப்படி இப்படி
ஒட்டியும் ஒட்டாமலும் !



- பிரகாசக்கவி


Monday, 20 January 2014

மாதவிடாய்



தீண்டாமை
என்றெண்ணி

வெட்கப்படும்
அவன் !

வேதனைப்படும்
அவள் !

கடதாசியில்
நப்கீன் சுற்றும் கடைக்காரன் !

இப்படித்தான்
கழிந்து போகிறது
அந்த சில நாட்கள் !

கருவுக்கு
கருவான சமாச்சாரத்தின்
கார்காலங்கள்

முத்தம் தொலைத்த
மூன்றாம் ஜாமம் !

நிசப்தப்பட்டுக்
கிடக்கிறது !

பாதம் சுமக்கும்
பாதரட்சைகளின்
பரதேசி வாழ்வு போல

மொழி பெயர்க்கப்படாத
ஜப்பானிய ஹைக்கூவாய்
ரசிக்கப்படாமலே .......

-பிரகாசக்கவி -

Sunday, 19 January 2014

குரல்வளை நெரித்திடு




பூக்களின்
மொட்டுடைத்து

பா க்களின்
பல்லவி திருடி

தொப்புள் கொடி
அறுத்தேனும்

தெருநாயாய்
அலைந்தேனும்

புணரத்துடிக்கும்
மூதேவிகள்

ஆண்குறி
இழுத்தறுத்து

இதயம்
கிழித்தெடுத்து

தோல் உரித்து
தொங்க விட்டாக வேண்டும்

நாளைய
வல்லுருகளின்
நரித்தனம் அடங்க !!

- பிரகாசக்கவி

Saturday, 18 January 2014

பேரினவாதம்



மதமெனும்
மதுவருந்தி

மொட்டைத் தலை சொரிந்து
அதிலே
அட்டை
பேன் பிடிக்கும் !

கருணைக்
கடல் தாமென்று

கண்ணிமைக்கும்
கணப் பொழுதில்

மாட்டுக்காய்
தீக் குளிக்கும் !

எரிகின்ற
தீ யணைக்க

சிறுபான்மையெனும்
சிற்றன்னை மார்பு அறுத்து
பால் தெளிக்கும் !

ஒரு பானைச் சோற்றுக்குள்
அவியமறுக்கும்
ஒற்றை அரிசியாய் !

தூர் வாரப்படாமல் !





-பிரகாசக்கவி -


Friday, 17 January 2014

நிதர்சனம்

பக்கத்து வீட்டுக்காரன்
முழுவயிறு நிறைத்து நிற்க
அவன் வீட்டு நாயும்
முழுமதியாய் நிற்கும் .

அதனாலே மிச்சபுரியாணி
என் வீட்டு
தெருச்சுவர் மூலையில்
முடங்கிக் கிடக்கும்

வருவோரும் போவோரும்
மூக்கு பொத்தி
சிலஅடி தூரம்
தள்ளியே நடந்து செல்ல

என்வயிற்று சிறுகுடலை
பெருங்குடல் தின்றுவிடுமளவு
பசிமயக்கம் தலைசுற்ற

நாற்றமெடுக்கும் புரியாணிக்கு
மண்ணள்ளி போடுகிறேன்
விதியின் சதியினால் 



- பிரகாசக்கவி


Thursday, 16 January 2014

தம்பட்டம்





போர்முடிந்ததாய்
பெரு முழக்கம் .

குதிரை குட்டியீன்ற
யானை முட்டை போல

ஆங்காங்கே தோரணங்கள்
அதன் நடுவில் காரணங்கள்

ஒடிந்துபோன ஓராயிரம் வீதிகளுக்கு
ஒட்டு போட்டாயிற்று !

இடி இடித்து
மின்னல் வெட்டி
குடையும் பிடிச்சாச்சு !

காய்ந்த மரங்களுக்கு
பச்சை முலாம் பூசப்படுகிறது !

தமிழர் கால் உடைத்து
குளிருக்கு குதூகலமாய்
சூப்பும் குடிச்சாச்சு !

சோனகர் தோல் உரித்து
மத்தளம் கொட்டலாச்சு !

பெய்யாத
பெரு மழையில்

பேய் நனைந்து

வாந்தி வருவதாய்
தேரைகள்
தேவாரம் பாடலாச்சு !

ஆனால் இன்னும்
சுதந்திரம் வந்து போனதாய்
சுவடுகள் தானுமில்லை இங்கு !

-பிரகாசக்கவி


Wednesday, 15 January 2014

இயற்றிவிடு





இலட்சியமில்லா பலர்
இலட்சங்கள் கேட்டதனால்
என் வாழ்வு
இலவுகாத்த கிளியின் கதையாச்சு
அதனால் என் ஆசைகளும்
முற்றிய வெண்டிக்காய் போலாச்சு !

என்னை பெற்றதனால்
அப்பாவின் கால்கள்
தேய்ந்து போச்சு
உழைத்ததனால் எங்கள்
உயிர்கள் மட்டுமே
மீதமுமாச்சு !

கேள்வியான என்
வாழ்க்கையினால்
தங்கையவள்
வாழ்க்கையும் கேலியாச்சு !

அதனால் அவள்
ஆசைகளும்
கூரையில் தொங்கும்
ஒட்டடை போலாச்சு !

மாடிவீட்டு
மல்லிகாவின் திருமணம்
பத்திரிகையில் விளம்பரமாச்சு
அதைப்பார்த்த
அன்னையவள் கண்கள்
கண்ணீரை உமிழ்ந்தாச்சு !

இத்தனையும் நான்
பெண் என்பதனாலாச்சு
என் போல்
எத்தனை எத்தனைபேர்
தாய் நாட்டில் வாழ்வது விதியாச்சு !

தலைக்கவசம் அணியாவிட்டால்
இலஞ்சம் வேண்டிவிட்டால்
தண்டனை வழங்குவது
அரசின் சட்டமாச்சு !

சீதனம் வேண்டுகின்ற
கலியுக அசுரர்களை தண்டிக்க
அரசு
சட்டமியற்ற மறந்துபோச்சு !

கூழோ கஞ்சியோ
குடிசையில் குடித்து
தாய்நாட்டில் நாங்கள் வாழ
சீதனச்சட்டம் இயற்றுவது
இன்றைய கட்டாய தேவையாச்சு !

- பிரகாசக்கவி


Tuesday, 14 January 2014

மரணம்



இதயம்
இறுகியும் .

உடல்
உறங்கியும் .

கண்கள்
பிதிங்கியும் .

எட்டு கால்களில்
சப்பாணியாக நீ '

ஆறடி நிலத்தினில்
அனாதையாகும் பொழுதுகளில்

இதய நாலங்களில்
இதமாக உறங்கியே
இடுப்பும்

காத்துகிடந்து கால்களும்
வலி எடுத்துவிட

மின்னலென வீறு கொண்டு
வினாடிகள் எல்லாம்
விடை பகர

வீட்டோ பவர் கொண்ட
வேங்கையென
உன் நாடித்துடிப்பு உரைகிறதே...

பிரகாசக்கவி -

Sunday, 12 January 2014

காணாமல் போனவன்





நடுநிசிப் பொழுதொன்றில்
விழிகள் மூடிக்கொண்டாலும்
மனசு உறங்குவதாயில்லை.

தொலைவில் ஓர் அசரீரி
முனங்குவதும் பின் அலறுவதுமாய்

நிச்சயமாய் அந்த அழுகுரல்
ஓர் ஆண்மகனுடையதாய்தான் இருக்கவேண்டும்
என்னால் நன்றாகவே ஊகிக்க முடிகிறது

பீதி ஆட்கொள்ளும் தருணம்
அது என்றாலும்
ஆவது ஆகட்டுமென
கதவுதிறந்து பார்க்கின்றேன்

அங்கே

முழந்தாளிட்டு
கைகளிரண்டும் பின்னால்
கட்டப்பட்டிருக்கிறது

ஆடைகளை காணவுமில்லை

தலையில் துப்பாக்கிச்சூடுபட்டு
இறந்தவன்போலும்
மூளை முழுவதும்
வெளித்தள்ளிக் கிடக்கிறது

இளம் இரத்தம் என்பதால்
ஈரம் காய்ந்திடவுமில்லை .

பிள்ளைக்கு கொடுப்பதற்காய்
அவன் ஆசை ஆசையாய் வாங்கிய கரடிபொம்மை ஒன்றை
வாயில் கௌவுவதும்
பின்
கீழே போடுவதுமாய் நிற்கிறது
நாய் ஒன்று .

சற்றேநெருங்கி அவன்
முகம் பார்க்கின்றேன்

ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை

அவன் நெற்றியில்
பெரிதாய் எழுதப்பட்டிருக்கிறது
இவன்
காணாமல் போனவன் என்று ...

-பிரகாசக்கவி

Saturday, 11 January 2014

பேய் தேசமும் சிட்டுக் குருவிகளும்




பேய் தேசத்து
பிரேதங்களின்
பின்னிரவு
பிரளயமாய்

உணர்வுகளும்
உரிமைகளும்
பெரும்பான்மையின்
விக்கலுக்கு
விருந்தாகப் பார்க்கிறது

ஜனநாயகம்
விழி பிதிங்கி
மொழி நடுங்கிக் கிடக்கிறது

பழமிருக்க
மலம் தேடும்
காகங்கள் போல

மதவாதம்
மகுடி இசைக்க

சிறுபான்மை எனும்
சிட்டுக் குருவிகள்
பேய் தேசத்தில்

வாழ்ந்தும்
வாழாமலும்

இறந்தும்
இறக்காமலும் !!

பிரகாசக்கவி

உடல்





உரல்வாய் மெல்லும்
ஊறவைத்த அரிசி போல
என் உயிர்வாய்
மரணம் மெல்லும்

கடைவாய் மெல்லும் மாட்டைப்போல்
அது கனிவாய் மெல்லும்

அதுவாய்
இதுவாய்

பொதுவாய்

சுகமாய் வாழ்ந்த வாழ்வை
எண்ணிப்பார்க்கச் சொல்லும்

மெதுவாய் உதுவும்
என் மலர்வாய் தடவி
மோகம்கொள்ள

ஜடமாய்
உடலும்
மாறிப்போகும்

நாற்றம் வீசி
பிணமாய் மண்ணுள் மக்கி
உடலும்
உக்கி போகும் !

பிரகாசக்கவி -

Friday, 10 January 2014

மண்ணாங்கட்டி




இல்லாத ஒன்றை
இருப்பதாய் சொல்லிக்கொள்கிறது
சால்வைக்காரனின்சாயம்போன நாவு !

கடலை அள்ளியெடுத்து
கரண்டி ஒன்றில் ஒளித்து வைத்ததைப்போல ....

அன்று
இரண்டாம் இனம்பிடித்து கருவறுத்து

கண்ணாடி கிண்ணங்களில்
இரத்தம் ஊற்றி
கதறல் இசைகளுடே
நடனமாடிப் பழக்கப்பட்டவன் அவனென்பதால்

இன்று
மூன்றாம் இனம்பிடித்து மல்லுக்கட்ட

பூதங்களுக்கு புத்தாடை மாட்டி
புறாக்களின் தேசத்தில்
அர்ச்சனை நடாத்த ஒத்திகை பார்க்கிறான்

ஆனாலும் பாவம் அவன்

நாளை ஒரு நாயைப்போல
அல்லது
நாணம்கெட்ட பேயைப்போல
எம் வீட்டு வீதிகளில்
புள்ளடிதேடி ....



- பிரகாசக்கவி -

வெய்யில் பழம்




சிலநாட்களாய் மழைத்தேன் அருந்தி
மண்டைச்சளி பிடித்துப்போனது எனக்கு

மூக்கோடிப்பிள்ளையைப்போல சினு சினுப்பதாய்
மழையைப்பார்த்து கடிந்துகொள்கிறாள்
பக்கத்து வீட்டுக்காரி

சட்டென்று முல்லைப் பூ
பூத்ததைப்போன்று
வானத்தின் தங்கமுலாம் பூசப்பட்ட ஆகாயத்தோட்டத்தின்
ஒற்றைப் பழமொன்று
இழுத்து மூடப்பட்ட ஜன்னல் இடுக்குகளினூடே
என்வீட்டுக்குள் கனிந்து வீழ்கிறது !

வைக்கோல் புதரொன்றுக்குள்
புதைத்தெடுக்கப்பட்ட மாங்கனிகளைபோல

இதற்குமுன்பும் இப்பழங்கள்
என்வீட்டு முற்றத்தில் வந்து
கொத்துக் கொத்தாய் வீழ்ந்திருக்கின்றன
அப்போதெல்லாம் இந்தப்பழங்களை யாரும் ருசிக்கவோ
அல்லது புசிக்கவோவில்லை

ஏன் எனக்குக்கூட ஒருநாளும்
இந்தப்பழங்களை அள்ளியெடுத்து
ஒரு சுருக்குப்பைக்குள்தானும் சுருக்கிட்டு
முடிந்து வைத்துக்கொள்ள தோன்றியதுமில்லை

நானும் அவர்களைப்போல்தான்
இப்பழங்களைப்பார்த்து
ஈவு இரக்கமின்றி
சரமாரியாய் திட்டித் தீர்த்திருக்கிறேன்
நெருப்புப் பழமென்று !

இருந்தும்
சூடு சொரணை இல்லாத
நம்ஊர் அரசியல்வாதிகளைப்போல் வெட்கமின்றி நான்

வீட்டிற்குள் வீழ்ந்துகிடக்கும் அந்த ஒற்றைப்பழத்தினை

புசித்திட துடிக்கிறேன்

என்னவோர் அதிசயம் !!!

திடீரென்று வாய்முளைத்து
வெய்யில்பழம் சத்தமாய் சொல்கிறது
வெய்யிலின் அருமை
குளிரில் தெரியும் என்று !!!

பிரகாசக்கவி -