அவர்கள் வாய்வழி பீச்சிய
கொடுஞ் சொற்களை எல்லாம்
மீன்களை போல்
வலை வீசிப் பிடித்தாயிற்று !
துடி துடிக்கும் அவைகளை
அருவாமனையில் வைத்தருத்து
புளி ஊற்றி
உப்பிட்டு
மிளகாய் பொடியில்
துவைத்தெடுத்து
கொதி எண்ணெய்யில்
பொரித்தெடுத்த
அதன் பிண்டங்களுக்கு
அறுசுவை என்னும் அரிதாரம் பூசி
அழகு அழகாய்
அலங்காரத் தட்டங்களில்
அள்ளி வைத்து
மீண்டும்
அவர்களுக்கே பரிமாறப்படுகிறது
என்னவோர் அற்புதம்
அவைகள் எல்லாம்
வெடுக்கடிப்பதாய் சொல்லி
வீரிட்டு
ஓடுகிறார்கள் அவர்கள்

No comments:
Post a Comment